
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ̀சின்ன மருமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஆதி என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் தான் ஸ்வேதாவின் கணவர் என்றும் அவர்களுடைய காதல் கதை இதுதான் என்றும் குறிப்பிட்டு பல விஷயங்கள் பேசியிருந்தார். இந்நிலையில் அந்தப் பேட்டி குறித்து ஸ்வேதா தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
” ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தனிநபர் பொதுவெளியில் நான் அவருடைய மனைவி எனக் கூறி பேசியிருக்கிறார். அந்த நபர் ஒரு பிராடு. அதுமட்டுமில்லாமல் அவர் மீது பல வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் போலீஸ் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் என் பெயரை குறிப்பிட்டு புனைக்கதைகளை கூறி நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியிருக்கிறார். துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால், அவனுடைய உண்மையான குணத்தையும் அவனுடைய கிரிமினல் பேக்கிரவுண்டையும் பிறகு அறிந்து கொண்டேன்.
என்னுடைய புகழை கெடுக்க
இப்போது அவன் என் எதிர்காலத்தை அழிக்க முடியாத வண்ணம் நான் சட்டப்படி அவனுக்கு எதிராக புகாரளித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். நான் சட்டப்படி அதற்கான விஷயங்களை தொடங்கிட்டேன். என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தப் பேட்டியில் என் புகைப்படங்கள், வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர் மீது அனுதாபம் ஏற்படவும், என்னுடைய புகழை கெடுக்கவும் நாங்கள் இருவரும் இப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது போல தவறான கதையை பரப்புகிறார்.

எனக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏதாவது புரொமோஷன் சார்ந்த விஷயங்களில் அவருடைய தலையீடிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. எந்த நேர்மையான புரொமோஷன் சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் என்னுடைய அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்! அதே போல யாரெல்லாம் அவனுக்கு சப்போர்ட் ஆக இருந்து என் பெயரையும், என் இமேஜையும் கெடுக்க நினைக்கிறார்களோ அவர்களும் சட்டப்படி அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உண்மைக்குப் புறம்பாக என்னை அவதூறுபடுத்த நினைப்பவர்களுக்கு எதிராக கண்டிப்பாக நான் ஆக்ஷன் எடுப்பேன்.
சூழலை புரிந்து கொள்ளுங்கள்
நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவற்றை கடந்து வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் தனியாக ஹேண்டில் செய்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் என் குடும்பம் எனக்கு பக்கபலமாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன் யாரும் தேவையில்லாத டிராமாவைவும், வதந்திகளையும் ஆதரிக்காதீர்கள். என்னுடைய சூழலை புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.