
புதுடெல்லி: தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்கிஸ்ட் மாநில செயலாளர் பி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘கொடிமரங்களை அகற்ற வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமை, சமத்துவம், சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாகும். பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும்.