
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூரைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் கௌசிக்குடன் தொழுதூரில் வசித்து வருகிறார் ராதா. கௌசிக் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய சிறுவன் கௌசிக், ஷூவை அணிந்திருக்கிறார்.
ஷூவுக்குள் கால் விட்ட அடுத்த விநாடியே காலை எடுத்த கௌசிக், வலியில் அலறித் துடித்திருக்கிறார். அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்த ராதாவிடம், ஷூவுக்குள் இருந்த ஏதோ தன்னை கடித்துவிட்டதாக கூறியிருக்கிறார் கௌசிக். அதனால் ஷூவை பார்த்தபோது அதற்குள் பாம்பு இருந்தது தெரியவர, அதிர்ந்து போயிருக்கிறார் ராதா.
அதற்குள் மயங்கி விழுந்த சிறுவன் கௌசிக்கை, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் கௌசிக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப் பூச்சிகளுக்கு ஷூவின் அமைப்பு ஒரு பாதுகாப்பான கூட்டைப் போல தோன்றும். அதனால்தான் அவை எளிதில் அதற்குள் தஞ்சமடைந்து விடுகின்றன. அதை கவனிக்காமல் அணியும்போது அவை கடித்து விடுகின்றன.
அதனால் பள்ளி மாணவர்கள் ஷூ அணிவதற்கு முன்பு, பெற்றோர்கள் அதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல ஷூ அணியும் அனைவரும் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.