
சென்னை: எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தேசியளவில் பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமத்துவமான, குழந்தைகளை எதிர்காலத்துக்கு தயார்ப்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான திட்ட வரைவை அடிப்படையாக கொண்டுள்ளது.
கரோனா கால கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 2021-22-ம் கல்வியாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்கீடு செய்து 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.