
சென்னை: மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நலனை காப்பதிலும் தமிழகம் நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை கடந்த 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்றைய தினம் 38 மாவட்டங்களில் 38 இடங்களில் நடந்த முகாம்களில் 44,418 பேர் பயன் பெற்றனர். இரண்டாவது சனிக்கிழமையான 9-ம் தேதி 48,046 பேர் பயனடைந்தனர். 16-ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்றாவது வாரமான நேற்று முன்தினம் 38 மாவட்டங்களில் 38 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாம்களில் 56,245 பேர் பயன் பெற்றனர்.