
காதல்கூட சற்று சுலபமாக கிடைத்துவிடலாம். ஆனால், அது திருமணத்தில் நுழைந்த பிறகு அந்த ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றிக்கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அதற்கு கொஞ்சமாவது உதவி செய்வதற்குத்தான் இந்தக் கட்டுரை.
காதலில்கூட பரஸ்பரம் மரியாதையின்மை அந்தளவுக்கு பெரிய பிரச்னை ஏற்படுத்தாது. ஆனால், திருமணத்தில் நுழைந்த பிறகு, ஒருவரையொருவர் கட்டாயம் மரியாதையாகத்தான் நடத்த வேண்டும். மரியாதை என்றால், ’வாங்க போங்க’ என்று மரியாதையாக பேசுவது அல்ல. ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். அது வீட்டுக்குள் என்றாலும் சரி, வெளியில் என்றாலும் சரி.
‘அதான் கல்யாணமாகிடுச்சே; இனி என்ன’ என, உங்கள் டாஸ்க்கில் வெற்றிபெற்று விட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். இப்படி நினைத்தால், உங்களை அறியாமலே பல விஷயங்களில் உங்கள் வாழ்க்கைத்துணையிடம் Taken for granted ஆக நடந்துக்கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள்.
விளைவு, இருவரில் ஒருவர் மனதளவில் புழுங்க ஆரம்பிப்பார். இது யாருடைய திருமண வாழ்க்கைக்கும் நல்லதல்ல.
’இறுகப்பற்று’ படத்தில் வருகிற அர்ஜுன், திவ்யா ஜோடி விவாகரத்து வரைக்கும் செல்வதற்கு இந்த ‘மட்டம் தட்டுதல்’தான் காரணம்.
அலுவலகத்தில் அறிவாளியாகக் கொண்டாடப்படுகிற திவ்யாவை, கணவன் அர்ஜுன் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மட்டம் தட்டிக்கொண்டே இருப்பான்.
காதல் சில காலம் சுயமரியாதையை இழந்து நிற்கும் அல்லது கட்டுப்படுத்தி வைக்கும்.
ஆனால், தன்னை ஒருவர் ’முட்டாள்’ என்று சீரியஸாகவோ, ‘மங்குனி அமைச்சர்’ என காமெடியாகவோ தொடர்ந்து மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால், என்றாவது ஒருநாள் ‘அய்யோ என்னை விட்டுடேன்’ என கையெடுத்து கும்பிட்டு விட்டு உங்கள் வாழ்க்கையை விட்டே ஓடி விடும்.
அது சினிமா என்பதால், அர்ஜுன், திவ்யா ஜோடியை டைரக்டர் சேர்த்துவிட்டார். நிஜ வாழ்வில் என்றால், குழந்தைகளுக்காக மருகிக்கொண்டே வாழும். அல்லது ஏற்கெனவே சொன்னதுபோல தப்பித்து ஓடி விடும்.
படத்தில் அது மனைவி கேரக்டர். நிஜ வாழ்வில் அது மனைவியாக மட்டுமே இருக்கும் என்பதில்லை.

ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ, அவருடைய வாழ்க்கைத்துணையின் குடும்பத்தினர், அதாவது மாமியார் வீட்டினர் மரியாதைக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ நடத்துவதை, இன்னொருவர் கண்டுகொள்ளாமல் இருப்பது மிக மிகத் தவறு.
இந்தக் காலத்தில் ஆண்களும் இந்தப் பிரச்னையை சந்திக்கிறார்கள் என்றாலும், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
மாமியார், நாத்தனார் மட்டுமல்ல, சில வீடுகளில் நாத்தனார் பெற்ற புத்திர ரத்தினங்கள்கூட, அவர்களுடைய பாட்டி மற்றும் அம்மாவைப் பார்த்து வீட்டுக்கு வந்த மருமகளை மரியாதைக்குறைவாக நடத்தும்.
அத்தனையையும் கணவன் என்கிற கேரக்டர் கண்டுகொள்ளாமல்தான் இருக்கும். ‘எனக்காக பேச மாட்டியா’ என்றாலோ ‘எங்கம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க; எங்கக்காவுக்கு என் மேல கொள்ளை பாசம்; அக்கா பிள்ளை குழந்தை. அதுக்கென்ன தெரியும்’ என்று சமாளிக்கும்.
ஒருகட்டம் வரை இந்த சமாளிப்பு செல்லுபடியாகும். அதற்கு மேல், உங்கள் திருமண வாழ்க்கை கையில் அள்ளிய நீர் போலதான். எப்போது நீர் வடிந்து வெறுங்கையுடன் நிற்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது.

கணவனோ, மனைவியோ எந்தளவுக்கு பிஸியாக இருந்தாலும், உங்களுக்கென நேரம் ஒதுக்குவதைத் தாண்டி, இருவரில் ஒருவர் உடனே பேச வேண்டுமென்றால், அதற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக காது கொடுங்கள்.
ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்றால், அது முடிந்தவுடனே போன் செய்யுங்கள். அதைவிடுத்து, ‘என் கணவன்/மனைவியிடம் இருந்து போன் வந்தும் எனக்கு அஃபிஷியல்தான் முக்கியம் என்று இருக்கிறேன் பாருங்கள்’ என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்யாதீர்கள்.
பெண்களுக்கு மூளையில் மொழி மையம் பெரியது. அதனால், அவர்கள் ஆண்களைவிட அதிகமாக பேசுவார்கள். அதற்கெல்லாம் காது கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்றோ, ’வேலை நேரத்துல போன் பண்ணி எங்கம்மாவுக்கு நீ இன்னிக்கு வெச்ச குழம்பு பிடிக்கலைன்னு சொல்வார்.
அதுக்கெதுக்கு நான் போன் எடுக்கணும்’ என்றோ, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விடாதீர்கள். இன்றைய மனைவிகளுக்கும் வெட்டிப்பேச்சு பேச நேரமில்லை.
கணவர்கள் எப்போதும் குற்றம், குறை சொல்வதற்கு மட்டுமே போன் செய்வார்கள் என்றில்லை. ஒருவருக்கொருவர் எப்போது வேண்டுமானாலும், சில நொடிகளாவது காது கொடுத்தல் என்பது, பரஸ்பரம் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…