
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
நிக்கியிடம் அவரது கணவனும், நிக்கியின் மாமியாரும் ரூ.36 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடிக்கடி நிக்கியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தனர். நேற்று இரவு நிக்கியை குடும்பத்தினர் சேர்ந்து அடித்து உதைத்து தீவைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு வீடியோவில் நிக்கியை அவரது கணவரும், கணவரின் தாயாரும் சேர்ந்து முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைக்கின்றனர். மற்றொரு வீடியோவில் நிக்கி உடல் முழுதும் எரிந்த நிலையில் வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.
நிக்கியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து நிக்கியின் உடம்பில் மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துள்ளனர். இதனால் நிக்கி அலறியடித்து வீட்டு படிக்கட்டுகளில் ஓடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்படியே அமர்ந்துவிட்டார்.
அம்மாவை அடித்து தீவைத்தார்கள்
அவரை தீக்காயத்துடன் பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலில் போர்ட்டீஸ் மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபினும் அவரது தாயாரும் சேர்ந்து நிக்கியைத் தீவைத்து கொளுத்திய போது அவர்களின் மைனர் மகன் மற்றும் நிக்கியின் மூத்த சகோதரி கஞ்சன் ஆகியோரும் அருகில் தான் இருந்தனர்.
அவர்கள் கண்முன்பாகவே நிக்கியைத் தீவைத்து எரித்தனர். நிக்கியின் மகனிடம் அங்கு வந்த ஒருவர் அம்மாவை அப்பா கொலை செய்தாரா என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் அம்மாவின் உடம்பில் எதையோ ஊற்றினார்கள். பின்னர் அம்மாவை அடித்தார்கள். அதனைத் தொடர்ந்து லைட்டரால் அம்மாவின் உடம்பில் தீயை பற்றவைத்தார்கள் என்று அச்சிறுவன் மழலைச் சத்தத்தில் தெரிவித்தான்.
காப்பாற்ற முயன்றேன் முடியவில்லை
சம்பவ இடத்தில் இருந்தும் தனது சகோதரியைக் காப்பாற்ற முடியாமல் இருந்த கஞ்சன் இது குறித்து கூறுகையில், ”என்னையும், எனது சகோதரியையும் துன்புறுத்தினார்கள். எங்களது வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் வாங்கி வரச்சொன்னார்கள்.
என்னை அதிகாலை 1.30 மணியில் இருந்து 4 மணி வரை அடித்தார்கள். ஒருவருக்குத்தான் வரதட்சணை வந்திருக்கிறது. மற்றொருவருக்கு வரதட்சணை எங்கே என்று எங்களிடம் கேட்டார்கள். நீ செத்துவிடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

எனது சகோதரியைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனது சகோதரிக்கு நடந்த அதே கொடுமை எனக்கும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று அழுதுகொண்டே சென்றார்.
கஞ்சன் கொடுத்த புகாரின் பேரில் நிக்கியின் கணவர் விபின், மைத்துனர் ரோஹித், நிக்கியின் மாமியார் தயா மற்றும் மாமனார் சத்வீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிக்கியின் கணவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெர்சிடீஸ் கார் கேட்டார்கள்
மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நிக்கியின் கொலைக்குக் காரணமானர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நிக்கியின் தந்தை பிகாரி சிங் கூறுகையில், ”அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தோம். முதலில் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் கேட்டாரகள். அதை வாங்கி கொடுத்தோம். அதன் பிறகு புல்லட் கேட்டார்கள்.
அதனையும் வாங்கி கொடுத்தோம். அப்படி இருந்தும் எனது மகளை அடித்து துன்புறுத்தினர். எனது மகளின் சாவுக்குக் காரணமானவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யவேண்டும். அவர்களது வீட்டை இடிக்கவேண்டும்” என்று கோபத்துடன் கூறினார்.
நிக்கியின் தந்தை சமீபத்தில் மெர்சிடீஸ் கார் வாங்கினார். அதேபோன்ற ஒரு கார் வாங்கித்தரவேண்டும் என்று கோரி நிக்கியை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி தீவைத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.