
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் செயல்படும் ஏராளமான பள்ளிக்கூடங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ் லாமியின் பலே-இ-ஆம் அறக்கட்டளையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
அத்தகைய பள்ளிகளின் நிர்வாகக் குழுவை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையர் நடவடிக்கை எடுப்பார். ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு புதிய நிர்வாகக் குழுவை அவர் முன்மொழிவார். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.