
பணி ஒழுக்கமின்மையால், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா (வசந்த் ரவி). அவருடைய பகுதியில், ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அதாவது கொல்லப்பட்டவர்களின் மணிக்கட்டுத் துண்டிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்திராவின் மனைவி கயலும் (மெஹ்ரின் பிர்ஸாடா) அதே பாணியில் கொல்லப்படுகிறார். இதையடுத்து கொலைகாரன் யார் என்பதை அறிய களமிறங்குகிறார், இந்திரா. கொலைகாரன் யார்? ஏன் கொலைகளைச் செய்கிறார், மனைவியின் கொலைக்கு என்ன காரணம் என்பது கதை.
இந்திரா என்கிற பெயரை வைத்து இது நாயகியை மையப்படுத்திய படம் என்று நினைத்துவிடக் கூடாது. நாயகனின் பெயர்தான் இந்திரா. போலீஸ் வேலையிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியுடன் நாயகன் இருப்பது போலத்தான் கதை தொடங்குகிறது. பிறகு சீரியல் கொலைகளுக்கு நகர்கிறது. இதுபோன்ற படங்களில் கொலையாளி யார் என்று தெரியாமல்தான் கதை நகரும். ஆனால், இதில் எடுத்த எடுப்பிலேயே கொலையாளி யார் என்பதை இயக்குநர் சபரீஷ் நந்தா சொல்லிவிடுகிறார்.