
சென்னை கண்ணகி நகரில் சாலையில் தேங்கிய மழைநீரில் கால் வைத்த பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் வரலட்சுமி (30). அப்பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணி யாற்றி வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்து தூய்மைப் பணிக்காக புறப்பட்டு சென்றுள்ளார். கண்ணகி நகர் 11-வது குறுக்குத் தெருவில் சென்ற போது, சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்ததும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.