
‘Hunger And Sacrifice’ என்கிற தலைப்பில் ஓவியர் செல்வ செந்தில்குமாரின் ஓவியக்கண்காட்சி சென்னை லலித்கலா அகாதமியில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.
ஓவிய ஆளுமைகள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரையும் இந்தக்கண்காட்சி கவர்ந்திருக்கிறது.
மனித உணர்வுகளை, அதன் சிக்கல்களைப் படிம நிலைகளாகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திருக்கும் ஓவியர் செல்வ செந்தில்குமார் இதுபற்றி பகிர்ந்து கொள்ளும் போது, “எனக்கு சொந்த ஊர் கொடைக்கானல். ஆனா பிறந்து வளர்ந்தெல்லாம் சென்னைதான். பள்ளிப்படிப்பு முடிச்சிட்டு பி.எஸ்.சி மேக்ஸ் தான் படிச்சேன். அதுக்கப்புறம் கலைல ஆர்வம் வந்து மைசூர் ஓவியக்கல்லூரில சேர்ந்தேன்.
இப்போ இந்த ஓவியத்துறையில பதினெட்டு வருசமா இருந்துட்டு வர்றேன். இந்தக் கண்காட்சில காட்சிப்படுத்துட்டுக்கிற ஓவியங்கள் எல்லாமே கடைசி மூணு வருசத்துல வரையப்பட்ட ஓவியங்கள்தான். இந்த நடைமுறை வாழ்க்கைங்கிறது ரொம்ப ஸ்மார்ட்டா ஈஸியா இருக்குன்னு நம்ம நினைக்கிறோம். ஆனா அது அழுத்தமாக மாறி பேரழுத்தமானதாகத்தான் மாறிட்டே இருக்கு.
அந்தப் பதற்றநிலையைத் தான் என்னுடைய ஓவியங்கள் பதிவு பண்ணுது. இந்த ஓவியங்களில் இருக்கிற ஆடு, கழுதை, குதிரை, பறவைகள் எல்லாமே மனிதர்களோட உணர்வுகளை மெட்டோபராகச் சொல்றது. இந்தக் கண்காட்சியில 140 ஓவியங்களை வச்சிருக்கோம்.

ஒரு கலைஞன் எந்த அளவுக்கு நேர்மையா இருக்கிறனோ அந்த அளவுக்கு அது மற்றவங்களையும் போய் சேரும். இந்தக் காலகட்டத்தில் நம்ம நிம்மதியைத் தேடுறோம். அதான் நம்மளால அப்படி இருக்க முடியிறதில்லை. யாரோடையும் நம்ம நேரடியான தொடர்பில் இருக்கிறதில்லை.
இந்த ஓவியங்களில் காட்டப்பட்டிருக்கிற கலரிங் ஒவ்வொரு காலத்தையும் குறிக்கிற மாதிரி வரைஞ்சிருக்கேன். இந்த ஓவியங்களை எல்லாமே மரூஉ தான். இந்தக் கண்காட்சியைப் பார்க்க வந்த நிறைய பேர் இன்றைய சூழலைத்தான் காட்டியிருக்கீங்க. எழுத்தாளர்களால் எழுத முடியாததைக் கூட உங்க ஓவியத்துல காட்டியிருக்கீங்கன்னு சொல்றாங்க ரொம்ப சந்தோசமாக இருக்கு“ என்று நெகிழ்கிறார் ஓவியர்.
கோயமுத்தூரில் இருந்து இந்த ஓவியங்களைப் பார்க்க வந்த ஓவியர் விக்னேஷ்வரன் இந்தக் கண்காட்சி பற்றி நம்மிடம் பேசும்போது, “இந்த ஓவியங்கள் எல்லாமே அவருக்குச் சமூகத்தின் மீதுள்ள பார்வையைத்தான் வெளிப்படுத்துவதாக இருக்கு. மனிதர்கள், விலங்குகள் எல்லாவற்றையும் குறீயீடாக வச்சி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கு.

பெரும்பாலான ஓவியங்கள் எனக்கு ஒரு படம் பார்க்கிறத மாதிரியும், கதை சொல்றத மாதிரியும் தான் தெரியுது. எதையுமே மறைமுகமாகக் காட்டாமன உணர்வுகளை நேரடியா வெளிப்படுத்துறார். சமூகத்தில் நையப்புடஞ்ச விசயங்களை வரைஞ்சிருக்கிறார்.
நவீன பாணி ஓவியங்கள்ன்னு இவருடைய ஓவியங்களை முதல் நாளிலிருந்தே நிறைய பேர் வாங்கிட்டு போறாங்க. அதைப்பாக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு. இந்தக் கண்காட்சி பார்க்கிறதுக்காகத்தான் கோயம்புத்தூர்ல இருந்து வந்தேன்” என மனம் நிறைகிறார் விக்னேஷ்வரன்.