
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் அஜித்துக்கும் திருநங்கை ரீட்டா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களாக நட்பு இருந்து வருகிறது. 20.08.2025 அன்று இரவு ரீட்டா தன்னை உடனடியாகப் பார்க்க வேண்டும் என அஜித்திடம் கூறியிருக்கிறார். அதனால் அஜித்தும் போரூர், காந்தி நகரிலுள்ள வீட்டில் ரீட்டாவைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
பின்னர் பைக்கில் அஜித், வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தார். போரூர் டோல்கேட், சர்வீஸ் சாலை வழியாகச் சென்ற போது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அஜித்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கியது. அடுத்து சில நிமிடங்களில் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் அஜித்தைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த அஜித் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அஜித் கொடுத்த புகாரின் பேரில் வானகரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
அஜித் அளித்த தகவலின்படி திருநங்கை ரீட்டாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அஜித்தைக் கொலை செய்ய முயன்றதற்கான காரணம் தெரியவந்தது. இதையடுத்து ரீட்டாவை போலீஸார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (எ) விஷ்ணுகாந்தன் (27) சென்னை மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (28), கொளத்துரைச் சேர்ந்த .சூர்யா(24), எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பிரசாந்த் (28), கொளத்துரைச் சேர்ந்த பிரவீன் (23), பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய 2 கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “திருநங்கை ரீட்டாவுடன் பழகி வந்த அஜித்துக்கு 27.08.2025-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதையறிந்த ரீட்டா அவ்வப்போது அஜித்திடம் தன்னை விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது எனத் தகராறு செய்து வந்திருக்கிறார்.
அதுதொடர்பாகச் சம்பவத்தன்று அஜித்திடம் ரீட்டா பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த ரீட்டா அவரின் நண்பரான விஷ்ணு என்பவருடன் கூட்டு சேர்ந்து அஜித்தைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். அதனால் திருநங்கை ரீட்டா உள்பட 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.