
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன்- கையர் நிஷா. இவர்களது மகள்களான செய்யது அஸ்மியாபானு மற்றும் சபிக்கா பானு ஆகிய இரண்டு பேரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் அவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததுடன் வானம் மந்தாரமாகக் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள தோப்பிற்குச் சென்ற சிறுமிகள் இருவரும், அங்குள்ள வேப்ப மரத்தில் இருந்து விழும் பழங்களில் உள்ள வேப்பமுத்துகளைச் சேகரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் திடீரென வானம் இடியும் மின்னலுமாகக் காணப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன சகோதரிகள் இருவரும் தாங்கள் வேப்பமுத்து சேகரித்து கொண்டிருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளனர்.
அந்நேரத்தில் பலத்த இடி ஒன்று அந்த வேப்பமரத்தினைத் தாக்கியுள்ளது. இதில் வேப்பமரத்தின் அடியில் நின்ற சகோதரிகள் இருவர் மீதும் இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற குழந்தைகள் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் குழந்தைகளைத் தேடி சென்றனர். அப்போது வேப்பமரத்தின் அடியில் இருவரும் இடி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த சத்திரக்குடி காவல் நிலைய போலீஸார் இடிதாக்கி உயிரிழந்த சிறுமிகள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.