
”மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் 100 கோடீஸ்வரர்களை உருவாக்குவேன்” என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் நாணயம் விகடனுக்கு பேட்டி அளித்திருந்தார் கோவையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கண்ணன்.
அவருடைய அந்த இலக்கு இப்போது நிறைவேறி இருக்கிறது. அவருடைய முதலீட்டாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குமேல் முதலீட்டு மதிப்பை எட்டியிருப்பதுடன், ஐந்து கோடி, ஆறு கோடீ ரூபாய் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்பது கோவை கண்ணனிடம் கேட்டாம். அதற்கு விளக்கமான பதிலைத் தந்தார் அவர்…
20 ஆண்டுகளுக்குமுன்
”நான் 2004-ஆம் ஆண்டு தனியாக மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உருவாகும் ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’கின் மகத்துவம் பற்றி அதாவது, கூட்டு வட்டியினால் கிடைக்கும் லாபம் பற்றி ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டேன்.
அதை என்னுடைய முதலீட்டாளர்களுக்கு சொன்னேன். தொடர்ந்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதன் மூலமும், முதலீட்டுத் தொகையை ஆண்டுதோறும் உயர்த்திவருவதன் மூலமும் ஒரு முதலீட்டாளர் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும் என்று நான் சொன்னபோது, என் முதலீட்டாளர்களில் பலர் நம்பவில்லை.
நான் ஏதோ ஜோக்கடிப்பதாகத்தான் பலரும் நினைத்தார்கள். 2004 முதல் 2008 வரை முதலீட்டாளர்கள் ஓரளவு லாபம் பார்த்தார்கள்.
ஆனால், 2008-ல் பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது. என் முதலீட்டாளர்களின் முதலீடு 50% காணாமல் போனது. நான் மீண்டும் முதலீட்டாளர்களை சந்தித்து, புதிதாக முதலீடு செய்யும்படி கேட்டேன்.
சிலர் ஒப்புக்கொண்டார்கள். சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொண்டு முதலீடு செய்தவர்கள், அடுத்துவந்த சந்தை ஏற்றத்தில் மிகப் பெரிய லாபம் கண்டார்கள். அந்த இறக்கத்தைத் தவறவிட்டவர்கள், ‘நல்ல வாய்ப்பு போச்சே’ என்று வருத்தப்படத்தான் செய்தார்கள்.
2010-ல் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்கில் வந்தபிறகு நான் எடுத்த வேகம் இன்றும்கூட சற்றும் குறையவில்லை. இன்றைக்கு என்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
இன்று நான் நிர்வகிக்கும் முதலீட்டுத் தொகை 275 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நான் நிர்வாகம் செய்யும் முதலீட்டுத் தொகை ஆண்டுதோறும் 16% என்கிற அளவுக்கு மேல் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் நான் நிர்வாகம் செய்யும் முதலீட்டுத் தொகை 1000 கோடி ரூபாய்க்குமேல் உயரும். இதன் மூலம் 1000 கோடீஸ்வர்களை உருவாக்குவேன்.
ஸ்டெப் அப் முதலீடு
இன்றைக்குக் கோடீஸ்வர்களாக இருக்கும் என் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது புதிது. இதில் முதலீடு செய்யும் பணம் என்ன ஆகுமோ என்று நினைத்து, ஆரம்பத்தில் 1000, 2,000 என்கிற அளவில்தான் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
ஆனால், இந்த முதலீட்டின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியவுடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி முதலீட்டுத் தொகையை குறைந்தபட்சம் 10% முதல் 20% வரை உயர்த்தத் தொடங்கினேன். அதாவது, ஒருவர் 2000 ரூபாய் முதலீடு செய்கிறார் எனில், அடுத்த ஆண்டு 2,500 ரூபாய் முதலீடு செய்ய வைத்தேன்.
இப்படி அனைவரும் ஆண்டுதோறும் செய்யத் தொடங்கியதால், முதலீட்டுத் தொகை கணிசமாக உயர்ந்தது. பங்குச் சந்தை உயர உயர, நல்ல லாபத்தையும் பார்த்தார்கள். இப்படி செய்தவர்கள்தான் இன்றைக்கு கோடீஸ்வர்களாக மாறியிருக்கிறார்கள்!

வெறித்தனமாக முதலீடு செய்கிறார்கள்…
ஒரு முதலீட்டாளர் 5,000 ரூபாய், 10 ஆயிரம் என முதலீடு செய்யத் தொடங்கியபின், 12% லாபத்தில் 10 லட்சம் ரூபாய் என்கிற நிலையை எட்டுவதற்கு 6 – 7 ஆண்டுகள் ஆகின்றன.
அதன்பிறகு அடுத்த நான்கு ஆண்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பை எட்டிவிடுவார். அடுத்து 40 லட்சம், 80 லட்சம் என 20 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயை எட்டிவிடுவார்.
ஆக, முதல் 10 லட்சம் ரூபாயை அடையும் வரைதான் ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைந்துவிடால், 20 லட்சத்தை அடைய இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.
அதன்பிறகு, அவரிடம் இருக்கும் பணம் 20 லட்சம் ரூபாய் எப்போது 40 லட்சம் ரூபாயானது என்பதை அவராலேயே சரியாக பார்க்க முடியாது; அந்த அளவுக்கு அதிவேகமாக வளரும்.
இதை அனுபவப்பூர்வமாகப் புரிந்துகொண்ட எனது முதலீட்டாளர்கள் வெறித்தனமாக முதலீடு செய்கிறார்கள். இப்போதெல்லாம் 1-ஆம் தேதி ஆனாலே போதும், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்யும்படி என்னிடம் தந்துவிடுகிறார்கள்.
இந்த 20 ஆண்டு காலத்தில் அவர்கள் அடைந்த லாபத்தைப் பார்த்து, அவர்களின் உறவினர்கள் பலரையும் என்னிடம் அழைத்துவந்து முதலீடு செய்யும்படி சொல்கிறார்கள். இதனால் புதிய முதலீட்டாளர்களைத் தேடி நான் அலைவதில்லை. என்னைத் தேடிவருபவர்களுக்கு சேவை செய்யவே எனக்கு நேரம் போதாமல் இருக்கிறது.

கலெக்டரையும், டாக்டர்களையும் உருவாக்கிய முதலீடு
என்னிடம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அவர்கள் செய்த முதலீட்டின் காரணமாக அவர்களின் வாழ்க்கையே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது.
எனது முதலீட்டாளரின் மகள் ஒருவர் யு.பி.எஸ்.இ பரிட்சை எழுதி, இப்போது தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கிறார். அவர் யு.பி.எஸ்.இ பரிட்சை எழுதத் தேவையான பணம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து கிடைத்ததுதான்.
கிட்டத்த 25-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் மகன்களை டாக்டர் படிப்புக்குத் தேவையான பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து எடுத்து செலவு செய்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு 20 லட்சம் ரூபாய் கல்லூரியில் கட்ட வேண்டும் எனில், அந்தப் பணத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே எடுத்து லிக்விட் ஃபண்டில் வைத்து விடுவேன்.
மார்ச் மாதக் கடைசியிலேயே அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தால், ஏப்ரல் 1-ஆம் தேதி அவர்கள் கட்டிவிடுவார்கள். பல முதலீட்டாளர்கள் பெரிய அளவில் கஷ்டப்படாமல் தங்கள் மகனையும், மகளையும் டாக்டர்களாக ஆக்கினார்கள் என்பதைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.
அது மட்டுமல்ல, 25 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் எனப் பல முதலீட்டாளர்கள் செலவு செய்து, தங்கள் மகனுக்கும், மகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அவர்கள் வீட்டுத் திருமணத்தில் முதல் பத்திரிக்கையை அவர்கள் வீட்டுப் பெரியவர்களுக்க்குத் தராமல் எனக்குத் தருவார்கள். அவர்கள் அதை சொல்லி அழைக்கும்போது எனக்கு கோடி ரூபாய் கிடைத்தது போன்ற சந்தோஷம் கிடைக்கும்.

எங்களுக்குப் பணம் வேண்டாம்
என்னிடம் முதலீடு செய்து கோடீஸ்வர்களாக மாறிய முதலீட்டாளர்கள் சிலருக்கு 50 வயதுக்குமேல் ஆகிவிட்டதால், எஸ்.டபிள்யு.பி முறையின்மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைத் திரும்பப் பெறும்படி சொல்லி வருகிறேன்.
ஒருவர் ஒரு கோடி ரூபாய் முதலீட்டுத் தொகையாக வைத்திருக்கிறார் எனில், அவர் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, தனது செலவுகளை செய்துகொள்ளலாம். இதனால் அந்த ஒரு கோடி ரூபாயும் தொடர்ந்து அதிகரிக்கும்.
மாதந்தோறும் குடும்பச் செலவுக்கான பணத்தையும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், என் முதலீட்டாளர்களோ, அதிகளவில் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ‘எங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதும்; எதற்கு இரண்டாயிரம் ரூபாய்’ என்று கேட்கிறார்கள்.
சிக்கனமாகவே இருந்துவிட்டதால், இப்போது அவர்களால் அதிக பணத்தை செலவு செய்ய முடியவில்லை. அப்படிப்பட்டவர்களை ஆண்டுதோறும் இந்தியாவில் இருக்கும் முக்கியமான கோயில் குளங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வரும்படி வற்புறுத்துகிறேன். ஆண்டுதோறும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் போய்வரும்படியும் சொல்கிறேன். கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்தது அனுபவிக்கத்தானே!

செய்யக்கூடாத தவறுகள்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அநேக முதலீட்டாளர்கள் சில தவறுகளை செய்துவிடுவதால், கோடிக் கணக்கில் பணத்தை சேர்க்க முடியாமல் போய்விடுகிறது.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அது 4 லட்சம் ஆகிவிட்டால், 400% லாபம் என்று நினைத்து பணத்தைத் திரும்ப எடுத்துவிடுகிறார்கள். அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்திருந்தால், பிற்பாடு அது 40 லட்சமாகவோ அல்லது 4 கோடியாக உயர்ந்திருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தபின் 10 லட்சம் ரூபாய் என்கிற இலக்கை எட்டுவதற்கு 6 – 7 ஆண்டுகள் ஆகலாம். அப்படி ஆனவுடன், அந்தப் பணத்தை எடுத்து ஒரு கார் வாங்கினால், அந்த முதலீட்டாளர் மீண்டும் ஜீரோ என்கிற நிலைக்கு வந்துவிடுவார்.
அதே போல, 10 லட்சம் ரூபாய் அடுத்த எட்டு ஆண்டுகளில் 8 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டால், அந்தப் பணத்தை எடுத்து வீடு வாங்கலாமே என்று நினைக்கிறார்கள். இப்படி செய்வதாலும் மீண்டும் ஜீரோ என்கிற நிலையை அடைந்துவிடுகிறார்கள்.
இந்த 40 லட்சம் ரூபாயைத் தொடர்ந்து வளரவிட்டால், அடுத்த 8 – 10 ஆண்டுகளில் அது 1.5 கோடிக்கு மேல் பெருகிவிடும். இப்படி 5 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு வளர்ந்தபின் நீங்கள் வீடு வாங்கினால், உங்கள் ஆசையும் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் சறுக்கல் என்பதும் இருக்காது. இதை என் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக செய்து உணர்ந்திருக்கிறேன்.
கோவையில் எனக்கென்று சொந்த வீடு இல்லை. ஆனால், இப்போது 10 ஏக்கரில் பண்ணை வீடு வைத்திருக்கும் அளவுக்கு நான் முதலீட்டில் உயர்ந்திருக்கிறேன்.
ஆயிரம், இரண்டாயிரம் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது பலரும் 1000, 2000 ரூபாய் என முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். இன்றைக்கு நாம் குடும்பத்துடன் ஒரு சினிமாவுக்கு போனால், ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறோம்.
எல்லோரும் பிரியாணி வாங்கி சாப்பிட்டால், 2000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அப்படி இருக்கும்போது 1000, 2000 ரூபாய் என்பது முதலீட்டுத் தொகையாக எப்படி இருக்கும்?
இந்த அளவு குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒரு முதலீட்டாளர் பெரிய அளவில் பணம் சேர்க்க முடியாது. 2000 ரூபாய் முதலீடு செய்யும் முதலீட்டாளர் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தாலும், 1.20 லட்சம் மட்டுமே சேர்த்திருப்பார்.
அது லாபத்துடன் 1.50 என்கிற அளவில்தான் இருக்கும். இந்தப் பணத்தினால் அவர் வாழ்க்கை பெரிய அளவில் உயராது.
என் சம்பளமே 15 ஆயிரம்தான். அதில் 2000 முதலீடு செய்கிறேன் என்கிறவர்கள் தவிர, மற்றவர்கள் குறைந்தபட்சம் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று தொடங்கி, ஆண்டுதோறும் 10% முதல் 20% முதலீட்டுத் தொகையை உயர்த்திச் செல்ல வேண்டும்.
இதற்கு முக்கியமாக, கடன் எதுவும் வாங்கியிருக்கக் கூடாது. கடன் வாங்கினால், அசலும் வட்டியும் கட்டத்தான் நம்மிடம் இருக்கும் பணத்தில் பெரும்பகுதி செலவாகுமே தவிர, முதலீடு செய்வதற்கு பணம் இருக்காது.
மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று நினைத்து பலரும் அதில் பணம் போடாமல் இருக்கிறார்கள். பங்குச் சந்தை எப்போது ஏறி, இறங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், நீண்ட கால நோக்கில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள், நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பே இல்லை” என்று பேசி முடித்தார் கண்ணன். அவர் சொல்கிறபடி, இனிவரும் காலத்தில் அவர் ஆயிரம் கோடீஸ்வரர்களை உருவாக்கட்டும்!
முக்கியக் குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை எஸ்.ஐ.பி முறையில் அடைய உதவும் கோல் கால்குலேட்டர் உங்களுக்குத் தேவை எனில், உங்கள் விவரங்களைத் தந்து இந்த பார்மைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்:
லாபம் யுடியூப் சேனல்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்கிய கோவை கண்ணன், லாபம் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவருடைய பேட்டி இங்கே