
சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை போலீஸார் உதவி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ 1252 என்ற எண்ணுடன் சென்னை காவல் துறையில் முதியோர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட `பந்தம்' என்ற சேவை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 9499957575 என்ற செல்போன் எண் மூலம் உதவி கேட்கும் முதியவர்களுக்கு உடனடி உதவி போலீஸார் மூலம் கிடைக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாடுகளில் பிள்ளைகள் வசிப்பதால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாத முதியோர்கள் என தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.