
பதவி நீக்க மசோதா
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பிற்கு இதுவரை எந்தப் பதிலும் சொல்லாது இருந்த பிரதமர் மோடி, நேற்று அது குறித்து பேசியுள்ளார்.
மவுனம் கலைத்த பிரதமர்
பீகாரின் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பீகாரில் உள்ள கயாஜிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் மோடி.
அங்கு அவர் மக்கள் மத்தியில் பேசும்போது, “ஒரு அரசு பணியாளர் 50 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவரது வேலை தானாக போய்விடும். அவர் டிரைவர், கிளர்க் அல்லது பியூன் என யாராக இருந்தாலும்…
ஆனால், ஜெயிலில் இருந்தாலும் கூட, முதலமைச்சர், அமைச்சர், பிரதமர் அரசாங்கத்தில் நீடிக்க வேண்டுமா?
ஜெயிலில் இருந்துகொண்டு அரசை இயக்க ஏன் அனுமதி தர வேண்டும்? கறைபடிந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளில் தொடர வேண்டுமா? மக்கள் தங்கள் தலைவர்கள் தார்மீக நேர்மையை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
`காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும்’
சில காலங்களுக்கு முன்பு, ஜெயில் இருந்துகொண்டு எப்படி கோப்புகள் கையெழுத்தாகின? ஜெயிலில் அரசாங்கம் எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்த்தோம். தலைவர்களிடம் இதுபோன்ற மனப்பான்மை இருந்தால், ஊழலை எப்படி எதிர்த்துப் போராட முடியும்?

காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இந்த மசோதாவிற்கு எதிராக போராடுகிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர்கள் ஊழலில் எப்போதும் ஈடுபடுவார்கள் என்பது பீகாரில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும்” என்று பேசியுள்ளார்.
ஜெயிலில் இருந்துக்கொண்டு கோப்புகள் கையெழுத்தாகின என்று டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சாடியுள்ளார் பிரதமர் மோடி.