• August 22, 2025
  • NewsEditor
  • 0

`பிடித்த இடத்திலேயே விட வேண்டும்’

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வெறி நாய் கடி விவகாரம்

இந்தியாவில் வெறி நாய் கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, டெல்லியில் சுற்றித் திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்றும், அவற்றை முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நாய்களுக்கு தேவையான கருத்தடை செய்வது தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

தெரு நாய்

உத்தரவுக்கு எதிராக மனு

இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மத்திய அரசு வாதம்

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, “ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு மேல் இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு 20000 நபர்கள் வரை இந்த தெரு நாய் கடியினால் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இங்கு யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் கிடையாது. அவற்றை யாரும் கொல்ல வேண்டும் என சொல்லவில்லை. அவற்றை மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்” என கூறினார்

மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்

அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இவற்றைக் காப்பகங்களில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அந்த காப்பகங்கள் எங்கே இருக்கிறது.

பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்படுகின்றது. அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும் பொழுது பெரும்பாலானவை இறந்து போகின்றன.

தெரு நாய்

தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை உள்ளிட்டவற்றை செய்யும் பொழுது அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால், அதை விடுத்து இப்படி ஈவு இரக்கமின்றி செயல்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

டெல்லிக்கு வழங்கப்பட்ட இந்த உத்தரவை பின்பற்றி பிற மாநிலங்களும் நாய்களைப் பிடிக்க தொடங்கியிருக்கின்றன என கூறினார்.

பிறகு வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிட்டாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,

“கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் உள்ள அனைத்து நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.

தற்பொழுது அந்த தீர்ப்பில் நாங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதன்படிடெல்லியில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அந்த நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் 

மூர்க்கத்தனமான ராபிஸ் நோயை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ள நாய்களை தொடர்ந்து காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும்.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாக தடை செய்கிறோம். தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை போடக்கூடாது .

தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை உருவாக்க வேண்ஂடும். 

நாய் கடி விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம்.

நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்.

Dog

தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது என்று இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.

தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்குகிறோம்.

நாய்களைப் பிடிப்போரை தடுப்பவர் மீது 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்”  என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *