• August 22, 2025
  • NewsEditor
  • 0

“தேர்தல் ஆணையர் என்பவர், தேசக் கட்டமைப்பின் ஒரு பகுதி. ஆனால் அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல!”

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேசனின் இந்தக் கருத்து, முற்றாக மறக்கப்பட்டுவிட்டதா? என்பதுதான் நமது முதன்மையான கவலை. கடந்த ஞாயிறுக்கிழமை, தலைமைத் தேர்தல் ஆணையர் முன்னெடுத்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின், அந்தக் கவலை மென்மேலும் கூடுதலாகிவிட்டது.

நாம் இப்போது ஒரு கட்சியையோ, ஆட்சியாளர்களையோ விமர்சிக்கவில்லை. நமது நாட்டின், ஜனநாயகத்தின் பாதுகாவலராகச் செயல்பட வேண்டிய ஒரு அரசமைப்பு அங்கம் சீர்கெட்டுவிட்டதா? என்ற கடுமையான கேள்வியை எதிர்கொண்டிருக்கிறோம்.

வரலாற்றில் நாம் இதுவரை பார்த்திராத ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறன்று நடத்தியது. அப்போது இந்தியா கூட்டணி கட்சிகள் பீகார் மாநிலத்தில் வாக்குரிமை பாதுகாப்பு பேரணியை தொடங்கியிருந்தார்கள்.

தேர்தல் ஆணையம் நடத்திய சந்திப்பில் பி.ஐ.பி (PIB) பதிவுபெற்ற செய்தியாளர்கள் மட்டும் பங்கேற்றார்கள். இதனால், பல முக்கியமான இணையதள ஊடகங்கள் அதில் பங்கேற்கவில்லை. இருப்பினும், அந்த சந்திப்பில் பல முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவற்றில் வாக்காளர் பட்டியலில் நிலவும் முறைகேடுகள் நீக்குதல், வெளிப்படைத்தன்மை பற்றிய கோரிக்கைகளுக்கு ஆணையம் சொன்ன மோசமான பதில்களை பலரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஈடாக நமது கவனம் பெற வேண்டியவை, தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்பட்டு ஆனால் பதில் சொல்லாமல் தவிர்க்கப்பட்ட கேள்விகள்.

அந்த கேள்விகளை மட்டும் கீழே பட்டியலிடுகின்றேன்..!

1. கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன, இவற்றை நீங்கள் விசாரிப்பீர்களா?

2. பாஜகவின் செய்தித்தொடர்பாளர் அனுராக் தாக்கூர் மேற்கொண்ட செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதிகளில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாகச் சொன்னாரே, அதற்கும் நீங்கள் எழுத்துப்பூர்வ உறுதிமொழி கேட்பீர்களா?

3. ஆதார் அமைப்பில், ஒருவரின் கைரேகை உள்ளிட்ட அம்சங்களை வைத்து அவரை உறுதி செய்துகொள்ள முடியும். வாக்காளர் அட்டையில் அப்படியான அம்சங்களை வைத்து போலிகளை நீக்கும் ஏற்பாடு ஏன் இல்லை?

4. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், 18,000 பெயர்கள் தொடர்பான புகாரை உறுதிமொழியோடு வழங்கினாரே… அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

5. பீகார் மாநிலத்தில் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எதற்காகத் திருத்தம் செய்யப்படுகிறது? மறைமுக தேசியக் குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவரும் நோக்கத்துடனா?

6. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் போலி வாக்காளர்களோடு நடத்தப்பட்டதா?

7. மராட்டியத்திலும், அருணாச்சல பிரதேசத்திலும் வாக்காளர் பட்டியலில் போலிகளை நீக்கம் செய்ய வேண்டும் என புகார் வந்தபோது, தேர்தல் நெருக்கத்தில் இருப்பதன் காரணமாக அங்கே பட்டியலில் திருத்தம் ஒத்திவைக்கப்பட்டது, அதே விதிமுறை ஏன் பீகாரில் நடந்துவரும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையில் மட்டும் பின்பற்றப்படவில்லை?

‘Vote Chori’ Row

8. பீகார் மாநிலத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன் திடீர் வெள்ளம் ஏற்படுகின்ற பருவநிலைக் காலத்தில், அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது?

9. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பட்டியல் வெளியிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அதை ஏன் வெளியிடவில்லை?

10. பீகார் மாநிலத்தில் 7.24 கோடி வாக்காளர்களிடம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் படிவத்தைக் கொடுத்துள்ளார்கள்? இந்த 15 நாட்களில் எத்தனை பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்?

11. 65 லட்சம் பெயர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன. ஏன் புதிய வாக்காளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை?

தேர்தல் ஆணையம் பதில்‌ சொல்லாமல் தவிர்த்த இந்தக் கேள்விகள் எல்லாமே மிகவும் முக்கியமானவை.

அந்த கேள்விகளை கவனித்தால், ராகுல் காந்தியிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி கேட்கும் தேர்தல் ஆணையம் தன்னிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் கொடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் புகாரை கிடப்பில் தான் போட்டுள்ளது தெரியும்.

ஊடகங்களே நேரில் சென்று முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாலும், தேர்தல் ஆணையம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து போவது தெரியும்.

எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி வைத்த அதே குற்றச்சாட்டுகளைப் பாஜக முன்வைத்தால், தேர்தல் ஆணையம் அதற்காகக் கோபமடையவில்லை என்பது அப்பட்டமாக தெரியும்.

தேர்தல் ஆணையம் ஒரு நடுநிலை தவறாத அமைப்பு என்ற நம்பிக்கையில்தான் நம்முடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற மாபெரும் பணியை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போதும், அரசாங்கம் தனது பதவிக்காலத்தை இழந்த சூழலிலும் அதற்குத்தான் அதிகாரம். இன்று வரையிலும் மக்களின் நம்பிக்கை இருப்பதால் அந்த அதிகாரம் செல்லுபடியாகிறது.

பீகாரில் நடந்துவரும் நிகழ்ச்சிப் போக்குகள் அதற்கான மிகப்பெரிய உதாரணம். கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று, வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை காணாத வகையில் சுமார் 8 கோடி வாக்காளர்கள், தங்கள் கையொப்பமிட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க வெறும் 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டது. படிவங்களை அச்சடிக்கக் கூட அவகாசமில்லை. இந்தப் பணியில் சுமார் 64 லட்சம் பேர் நீக்கப்பட்டது, வரலாற்றில் இதுவரை காணாதது என்றாலும், சுமார் 7.24 கோடி படிவங்களில் போலிகளை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் இன்னும் பலகோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையில்தான் படிவங்களைக் கொடுத்தார்கள்.

ஆனால், அந்த மக்களில் எத்தனை பேரால் தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களைக் கொடுக்க முடிந்தது? தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்ட பெயர்களில் பலரும் உயிர்ப்பித்து வந்திருக்கிறார்களே, அவர்களுக்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் நிவாரணம் என்ன? தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் சென்று முறையிட்ட பின்னர்தான், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்ப் பட்டியலே அந்த மக்களுக்கு பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதே போக்கில் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், வரலாற்றில் இதுவரை காணாத `வாக்குப் பறிப்பு ஆணையம்’ என்ற பெயரை இந்தியத் தேர்தல் ஆணையம் பெறக்கூடும்.

இந்த விவாதங்களும், போராட்டமும் நடந்துகொண்டிருந்த பின்னணியில்தான் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ராகுல் காந்தி வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தினார். கர்நாடக மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் போலியாக இடம்பெற்றிருந்தன. இவ்வாறு போலியாகப் பல கோடி வாக்காளர்கள் இணைக்கப்படிருப்பதை அறிய வாக்காளர் பட்டியல் டிஜிட்டல் வடிவத்தில் வேண்டும் என்றார்.

ஆனால், ராகுல் காந்தியை மிரட்டும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியது. இப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு வரை அதே அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது. மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் எதற்காக பயம்?

2024 தேர்தலுக்கு பின் சில ஊடகங்களும், எதிர்க் கட்சிகளும் வெளிப்படுத்திவரும் மிக முக்கியமான புகார்களை பாருங்கள். இவையெல்லாம் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியவையா?. இவை கட்சிகளுடைய பிரச்சனையா?

1. திருச்சூர் தொகுதி – கேரள மாநிலத்தில் பாஜகவால் ஒரு தொகுதியை வெல்ல முடிந்தது மிகவும் வியப்போடு பார்க்கப்பட்டது. அங்கே வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ததில் மாநிலத்தின் பல பகுதிகளிலுமிருந்து பாஜக ஆதரவாளர்களுக்குத் திருச்சூர் தொகுதியில் வாக்கு தரப்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளைக் குறிவைத்து வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்தக் குடியிருப்பு வாசிகளுக்குப் புதிய வாக்காளர்களை யாரென்றே தெரியவில்லை. வாக்காளர் பூத் அளவில் இந்த முறைகேடுகளைக் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிப்படுத்தியுள்ளன. புகாரும் செய்துள்ளன.

2. பீகாரில், சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் 5,000 வாக்காளர்களின் பெயர்கள் அப்படியே நகலெடுத்து இணைக்கப்பட்டிருப்பதை `ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற நிறுவனம் வெளியிட்டது. ஆனால், அந்த மாநிலத்தில் 3 தொகுதிகளில் மட்டும் சுமார் 80,000 வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டிருப்பதையும் அதே நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டது. ஆனால், இதுபோல் ஆய்வுகளைச் செய்ய முடியாதபடி வாக்காளர் பட்டியலை மாற்றியமைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

3. 2024 மக்களவைத் தேர்தலில், பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கையைப் பலமுறை கேட்டும் வெளியிடாத தேர்தல் ஆணையம், மிகத் தாமதமாக அவற்றை வெளியிட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும், பதிவான வாக்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டை சில பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தினார்கள்.

4. ஒடிசா‌ மாநிலத்தில் கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட 30% அதிகம் எண்ணப்பட்டது என்ற புகாரை பிஜூ ஜனதாதளம் மீண்டும் எழுப்பியது.

5. மராட்டிய மாநிலத்தில் 47 லட்சம் வாக்காளர்கள் புதிதாக இணைக்கப்பட்டதும், வாக்குப் பதிவில் திடீர் உயர்வு ஏற்பட்டதும் எப்படி என்ற கேள்விக்குச் சி.சி.டி.வி பதிவுகளில் விடை கிடைக்கக் கூடும். (சி.சி.டி.வி பதிவுகளை 45 நாட்களில் அழிக்கலாம் என பாஜக அரசு விதியை திருத்தியது)

6. வி.வி.பேட் இயந்திரத்தில் அச்சான வாக்குகளை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் காட்டும் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. (உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பு, வி.வி.பேட் எண்ணிக்கையைக் கோருவதை அதிகச் செலவு பிடிக்கும் நடவடிக்கையாக மாற்றியுள்ளது)

7. கர்நாடகாவின் மகாதேவ்பூர் தொகுதியில் சிலுமே என்ற ஒரு என்.ஜி.ஓ, பல்வேறு தனிநபர் தரவுகளைத் திரட்டி அதன் மூலம் போலி வாக்காளர் சேர்ப்பு முறைகேட்டுக்கு உதவியதும், தனிநபர் தரவுகளை வைத்து வேறு பல முறைகேடுகளில் ஈடுபட்டதும் நியூஸ் மினிட் என்ற பத்திரிக்கை விசாரணையில் அம்பலமானது.

இந்த புகார்களில் பலதும் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்பட்டன. ஆனால், இப்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை பார்த்த பிறகும் அதே நம்பிக்கையில் தேர்தல் ஆணையத்தக் அணுக முடியுமா?

வாக்குப்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்தால், அது பெண்களின் தனி உரிமையை பாதிக்கும்‌ என்ற சால்ஜாப்பும்.

வீடுகளே இல்லாத வாக்காளர்களுக்கு வீட்டு எண் ‘0’ என்று பதியப்பட்டதாக சொல்லும் சமாளிப்பும் நம்பக்கூடியவைதானா?.

ஒரே மாதிரியான முகங்களையும், முகவரிகளையும் அடையாளம் கண்டு நீக்கும் தொழில்நுட்ப வசதி படைத்த தேர்தல் ஆணையம் ஏன் இவ்வளவு தள்ளிப்போடுகிறது?. பின்னணியில் எதை மறைக்க முயற்சி நடக்கிறது?.

தேர்தல் ஆணையம், கடந்த காலங்களில் ஆளும் கட்சிக்கு சில சாதகங்களை செய்திருக்கிறது. சில விசயங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் மொத்தமாகவே பாஜகவின் கைப்பாவையாகிப் போனார்களா என்ற கேள்வி எழுந்துவிட்டது.

வாக்குப்பட்டியலை விருப்பப்படி வளைக்க முடியும் என்பதால் தான் பாஜக நினைக்கும் தொகுதியில் தன்னுடைய வாக்காளர்களைக் குவியலாகச் சேர்த்துக்கொள்ள முடிகிறதா?. தனக்குச் சாத்தியமான இடங்களில் வாக்காளர்களைக் கொத்தாக நீக்க முயற்சிக்கிறதா?. ஒரு சில தொகுதிகளில் மட்டும் பதிவான வாக்குகளை விடக் கூடுதலாக எண்ணி முடிவுகள் மாற்றப்பட்டனவா? மொத்தமுள்ள எல்லாத் தொகுதிகளிலும் செய்யாமல், வெகு சில தொகுதிகளில் மட்டும் இதுபோல் முறைகேட்டைச் செய்வதற்கு ஆணையம் ஒரு கருவியாக இருந்ததா?

கூடுதல் வாக்குப் பெற்றவரே எல்லோருக்கும் பிரதிநிதி, அதிக எம்.பி இருந்தாலே நாட்டுக்கு பிரதமர் என்ற தேர்தல் முறை நடைமுறையில் இருப்பதால், இவையெல்லாம் எளிதாகிப்போகின்றன.

இப்படியே போனால், அடுத்தது ஒரு அபாயமும் சாத்தியமே – ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விரும்புவது போல சொந்த நாட்டுக்குள்ளேயே ஒருபகுதி குடிமக்களை பாரபட்சமாக ஒதுக்க முடியும். அதற்கு தோதாக மக்களை பிளவுபடுத்தும் பிரிவினை ஆயுதமாக்க ‘குடிமக்கள் பதிவேடு’ திட்டத்தையும் செயல்படுத்த முடியும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டு மக்களுக்கு, ராதாபுரம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு அப்பாவு பெற்ற வெற்றி எப்படி இன்பதுரை வசமானது என்று தெரியும். அப்பாவு பெற்ற வாக்குகளை எண்ணவும், வெளியிடவும் நீதிமன்ற படிக்கட்டுகளை பலமுறை நாட வேண்டியிருந்தது. நாடு முழுவதும் சில ராதாபுரங்கள் உருவானால், நாட்டின் ஆட்சியை மொத்தமாக கைப்பற்ற முடியும் என்பதுதான் முறைகேட்டின் ‘டிசைன்’.

பாஜக அரசாங்கம் சட்டத்தை மாற்றி தேர்தல் ஆணையரை பிரதமரே முடிவு செய்யலாம்‌ என்று ஆக்கியது. எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக எதிர்த்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே, தேர்தல் ஆணையர், பிரதமருக்கு சேவகம் செய்தால் போதும் என நினைக்கிறாரா?

இதே போக்கில் அவர் தொடர்ந்தால், இழப்பு எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, நம் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே. இப்படியொரு நிலைமையை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. அதனால்தான், நம் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் மிகக் கடுமையான முடிவை எதிர்க் கட்சிகள் கூட்டாக மேற்கொண்டுள்ளன.

இப்போதும் ஒரு கேள்வி இருக்கிறது. வாக்கெடுப்பில் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஞானேஷ் குமார் என்ன செய்வார்? தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் சென்று வாக்குக் கேட்பாரா?

______________________

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *