
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோத்தகிரி அருகில் கேம்ப லைன் தூய்மைப் பணியாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து மாநாட்டிற்குச் சென்ற 18 வயதான ரித்திக் ரோஷன் என்ற இளைஞர் வெயிலின் தாக்கம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞரின் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த துயரம் குறித்துத் தெரிவித்த ரோஷனின் உறவினர்கள், “ரோஷனின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை கோத்தகிரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், குடி நோயாளி. சகோதரி கடுமையான உடல்நலக்குறைவால் நாள்தோறும் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடுமையான வறுமை மற்றும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக 11-ம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கொரியர் வேலையில் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

சக நண்பர்களுடன் மாநாட்டிற்குச் சென்ற இடத்தில் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது. வெயிலைத் தாங்க முடியாமல் துவண்டு மூச்சுத்திணறலில் துடித்த அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கூட உரிய நேரத்தில் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பமே தற்போது நிலைகுலைந்து போயிருக்கிறது. உரிய இழப்பீட்டை த.வெ.க அறிவிக்க வேண்டும்” என்றனர்.