• August 22, 2025
  • NewsEditor
  • 0

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக மாநாடு

பரந்தூர் விமான நிலையம்

1.பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டிக்கிறோம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்

2.சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: வாக்காளர் பட்டியல் பெயரில் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா?

இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

மீனவர்கள் கைது சம்பவங்கள்

3. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்.

படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கெனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஆணவக் கொலைகளைத் தடுக்க

4. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்:

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

தவெக மாநாடு – விஜய்

பெண்கள் பாதுகாப்பு

5. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்.

அரசுப் பணி

6. அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:

அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *