தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை நடந்தது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், “ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அது கபட நாடகம் மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடமாட்டோம். ஸ்டாலின் அங்கிள் உங்ககிட்ட கேட்க சில கேள்விகள் இருக்கு, அதுக்குப் பதில் சொல்லுங்க.
உங்களுடைய ஆட்சியில் ஊழல் இல்லாம இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா? பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கா? பொது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கா? இயற்கை வளங்களுக்குப் பாதுகாப்பு இருக்கா சொல்லுங்க மை டியர் அங்கிள். டாஸ்மாக்ல மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல ஊழல். உலகிலேயே மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட்ஸ் உங்களுக்கும் உங்க கூட இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் கொடுக்கணும்.
இதைப் பார்த்து வாயே இல்லாத ஊரெல்லாம் வயிறு வலிக்க சிரிக்கிது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? எல்லாவற்றையும் முடி மறைத்து விடலாம் எனப் பார்க்கிறீர்களா? பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை எனப் பெண்கள் கதறுகிறார்களே அது உங்கள் காதுகளில் கேட்கிறதா? இதில் உங்களை எல்லோரும் அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்கிறீர்.
பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதி கொடுத்தீங்க. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பரந்தூரில் விமான நிலையம் வராது என அந்த கிராம மக்கள், மீனவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லோருக்கும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கிறீர்கள். வெரி வெரி ஒர்ஸ்ட் அங்கிள்.
எல்லோரும் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வார்கள். ஆனால் நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற பின்பு தான் கட்சியையே ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒட்டுமொத்தமாக 2026-ல் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்புகிறோம்.
மார்க்கெட் போனதுக்கு அப்புறம் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரல. படைகளைத் திரட்டி அரசியலுக்கு வந்திருக்கேன். எல்லாத்துக்கும் தயாராக வந்திருக்கிறேன். அரசியல் தலைவன் சினிமாக்காரனா இல்லையா என்பது முக்கியமில்ல அவன் உண்மையானவனா என்பதுதான் முக்கியம்
அம்பேத்கரைத் தோற்கடித்தது, காமராஜரைத் தோற்கடித்தது, நல்ல கண்ணுவைத் தோற்கடித்தது எல்லாம் சினிமாக்காரர்கள் அல்ல, அரசியல்வாதிகள்தான். இது போன்ற நல்ல தலைவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதும் அரசியல்வாதிகள்தான். எல்லா அரசியல்வாதிகளும் அறிவாளி கிடையாது, எல்லா சினிமாக்காரர்களும் முட்டாள் கிடையாது” எனப் பேசி முடித்தார்.