
தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.
மாநாட்டில் பாஜக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த விஜய், இறுதியாக ஒரு குட்டிக் கதை கூறினார்.
“ஒரு அரசியல் தலைவன் சினிமாக்காரனா, நல்லவனா, கெட்டவனா என்பதையெல்லாம் தாண்டி அவன் உண்மையானவனா என்பது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இது சம்பந்தமா ஒரு குட்டிக் கதை சொல்றேன்.
ஒரு நாட்டுல ராஜா தனக்குப் பக்கபலமா இருக்குறதுக்காக ஒரு தளபதிய தேடுறார். அதுக்குச் சரியான தகுதிகளோடு பத்து பேர் செலக்ட் ஆகுறாங்க.
ஆனா அதுல ஒருத்தர்தான் செலக்ட் ஆகணும். அதனால ராஜா ஒரு டெஸ்ட் வச்சாரு. அந்தப் பத்து பேர் கையிலயும் விதை நெல்ல கொடுத்து `இதை நல்லா வளர்த்து மூணு மாசம் கழிச்சு வாங்க’னு அனுப்பி வச்சாரு.

மூணு மாசம் கழிச்சு வரும்போது, அதுல ஒருத்தர் ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். இன்னொருத்தர் தோள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். ஒன்பது பேரும் நல்லா வளர்த்துக் கொண்டு வந்திருந்தாங்க.
ஒருத்தர் மட்டும் வெறும் தொட்டியோட வந்தாரு. என்னனு ராஜா கேட்டதுக்கு, `நானும் தண்ணி ஊத்தி பாத்தேன் உரம் வச்சு பாத்தேன் வளரவே மாட்டேங்குது ராஜா’ என்று சொன்னதுக்கு, ராஜா அவரைக் கட்டியணைச்சு `இனிமே நீதான் என்னோட தளபதி. எல்லா அதிகாரமும் உனக்குதான்’னு சொன்னாரு.

ஏன்னா அந்த 10 பேர் கையிலயும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது.
அந்த ஒன்பது திருட்டுப்பயலுகளும் வேற விதை நெல்லை வாங்கி, அதை வளர்த்து ராஜாவ மக்களை ஏமாத்தியிருக்காங்க.
அந்த ஒருவர் மட்டும் உண்மைய போட்டு உடைச்சிட்டாரு. இப்போ நீங்க எல்லாரும்தான் அந்த ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகின்ற அந்த தளபதி…” என்று கூறி முடித்தார்.