• August 21, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் கடந்த 2023ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் தன்னை பா.ஜ.க கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டுவிட்டது. ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவர். ஆனால் ராஜ் தாக்கரே 2005ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகி தனியாக வந்து தனிக்கட்சி தொடங்கினார்.

தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நிலையில் முதல் முறையாக மராத்தி பிரச்னையில் ஒன்று சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் இந்தித் திணிப்பு கொண்டு வந்தபோது இரண்டு பேரும் சேர்ந்து குரல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து இரண்டு பேரும் இணைந்து வரும் மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் முறையாக தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மும்பையில் தேர்தலை சந்தித்தனர். மும்பையில் மின்சாரம் மற்றும் பஸ் போக்குவரத்தை இயக்கி வரும் மும்பை மாநகராட்சியின் பி.இ.எஸ்.டி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு கிரெடிட் சொசைட்டி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

அந்த சொசைட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்த சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர்.

பா.ஜ.க தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் பிரசாத் லாட் மற்றும் பிரவீன் தாரேகர் ஆகியோர் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர். இது தவிர தொழிற்சங்க தலைவர் ஷெசாங் ராவ் தலைமையிலான தொழிற்சங்கமும் போட்டியிட்டது. இதில் ஷெசாங் ராவ் தலைமையிலான தொழிற்சங்கம் மொத்தமுள்ள 21 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க தலைமையிலான அணி 7 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தாக்கரே சகோதரர்களின் இரண்டு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட இரு கட்சிகளும் வெற்றி பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”தாக்கரே பிராண்ட்டை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

பெஸ்ட் தொழிலாளர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தாக்கரே சகோதரர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இத்தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் இது ஒரு கூட்டுறவு சங்க தேர்தல் என்று தெரிவித்தார்.

இத்தேர்தல் இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இது இரு கட்சிகளின் கவுரப் பிரச்னையாக அமைந்தது. இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் யாரும் பிரசாரம் செய்யவில்லை. இதற்கிடையே ராஜ் தாக்கரே திடீரென முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ் தாக்கரே மீண்டும் பா.ஜ.க பக்கம் சென்றுவிடுவாரோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மறுத்துள்ள ராஜ் தாக்கரே.நகர திட்டமிடுதல் தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன் என்றும், பிரச்னைகளுக்கு எப்போதும் தான் முன்னுரிமை கொடுப்பேன் என்று தெரிவித்தார். துணை முதல்வர் அஜித்பவாரும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *