தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “‘தம்பி தலைமை ஏற்கவா’ என்று தம்பிகளுக்கும், இளைஞர்களுக்கும் அறிஞர் அண்ணா கூறினாரோ? அதேபோல இந்த மதுரை மண்ணில் எங்க தலைவர் தம்பிகளை அழைக்கிறார்.
மாநாடு முகப்புரையில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஏன் என்ற கேள்வி இருந்தது. எல்லோருக்கும் எல்லாமும் என்ற அரசியலை அண்ணா கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்த சமத்துவ அரசியலே திராவிடம். இளைஞர்களுக்கான அரசியலையும், சிறுபான்மையினருக்கான அரசியலையும், ஊழற்ற அரசியலையும் உருவாக்கினார் அண்ணா அதுதான் திராவிடம்.
ஆனால் அண்ணா, எம்ஜிஆர் தியாகத்தை குடும்ப நலனுக்காக மாற்றிவிட்டார் கருணாநிதி. தவெக மாநாட்டுக்குத் தடைகளை உருவாக்கினார் மதுரைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி. குடும்பத்தின் ஊழலைப் பேசியதால் பிடிஆர் தியாகராஜனின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார். ஏனென்றால் அதுதான் பாஜக உடன் திமுகவிற்கு இருக்கும் உறவு. அண்ணாவும், எம்ஜிஆர் அவர்களும் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால் அதிமுக என்ன நிலைமையில் இருக்கிறது.
பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அரசியல் வெற்றியாக மாற்றி 2026-ல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி தலைவர் விஜய் முதல்வராக உருவாகி அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவார்” என்று பேசியுள்ளார்.