
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித் ஷாவை நோக்கி அவர்கள் வீசி எறிந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.