
சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர்.
தவெகவின் 2-வது மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது.