
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி வருகிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் விஜய்.
அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தெரு நாய்கள் இல்லை என்றால், எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும். அதனைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது அதை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பு ஏற்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன்.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் எனக் கூறுவது எப்படிச் சாத்தியம். அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு எனக் கூறி, குடிசையைக் கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக் கூறிக்கொண்டு மதுவைக் குடித்துத்தான் ஒழிப்பார்கள் போல. மதுரை த.வெ.க மாநாட்டுக்கு முதல் நாளே தொண்டர்கள் சென்றது, நாட்டில் வேலை இல்லாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்றார்.