
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.