
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
லே நகரை அடையும் வழியைத் தொட்டது முதல் அன்றைய தினம் முழுக்க சீரான சாலைதான். இடையில் ஒரு பெரிய வாட்டர் கிராஸிங் இருந்தது. எங்களின் பந்தோபஸ்துக்கு வந்த டெம்போ டிராவலர் எங்களுக்கு முன்பே அந்த வாட்டர் கிராசிங்கை கடந்து சென்று விட்டதால், பின்னிருக்கையில் இருந்த எங்களை நனையாமல் அழைத்துச் செல்ல ஆளில்லை. பைக்கர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர்களது சாகசங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.
சாலையை உடைத்துக்கொண்டு தண்ணீர் பாய்ந்தபடியிருந்தது. நீர்வரத்து சற்றே குறைவாக இருந்த ஓரத்தில் சாலையைக் கடக்க ப்ரீத்தி, அதிதீ உள்ளிட்டோர் முயன்று கொண்டிருந்தனர். நானும் வித்யாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். எப்படிப் பார்த்தலும் முழங்கால் வரை நீரில் இறங்காமல் அப்பகுதியைக் கடக்க முடியாது என்றே தோன்றியது. நீரின் வேகமும் அதிகமிருந்ததால், ஒருவேளை நடந்து செல்லும்போது தடுக்கிவிட்டால் என்னாவது என்று நாங்கள் தயங்கிக்கொண்டிருக்க, பெரிய அளவிலான ஜீப் ஒன்று அங்கு வந்தது. கட்டுமான பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த வாகன ஓட்டுநரிடம் பேசி, எங்களை மறுகரையில் இறக்கிவிடும்படி கேட்டுக்கொண்டார் சஷாங்க்.
நாங்கள் அவ்வண்டியில் ஏறி நீரைக் கடந்தோம். அதற்குள் எங்கள் அணியினர் ஒவ்வொருவராக வண்டியை நீரில் இறக்கிக் கொண்டிருந்தனர். இதுவரை கடந்ததிலேயே இதுதான் கொஞ்சம் சாவலான வாட்டர் கிராஸிங். அதில் சிலரின் வண்டி நீரில் சரிந்தபோது மற்றவர்கள் நீரில் இறங்கி பைக்கை தூக்கிவிட்டனர். அதில் மனீஷின் பைக் பழுதாகிவிட்டது. எங்களுடன் வந்திருந்த மெக்கானிக் குழு அதைச் சரி செய்யும்வரை நாங்கள் வண்டிகளை ஓரங்கட்டிவிட்டுக் காத்திருந்தோம். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.
மிதமான வானிலையில், அவ்வப்போது செடிகொடி மலர்களால் சூழப்பட்ட அழகிய சிறு கிராமங்களையும் லே நகரை அடையும் வழியில் கடந்தோம். சென்ற முறை தங்கியிருந்த அதே விடுதிக்குத்தான் அன்று மாலையும் சென்றோம். பாங்காங் – டிஸோ மோரோரிக்கு எங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, எங்களுடைய மீதி பைகளை அந்த விடுதியில் வைத்திருந்தோம். டெம்போ டிராவலரில் எங்கள் வண்டிகளுக்குத் தேவையான எரிபொருள் மற்ற சாமான்களைக் கொண்டுசெல்ல இட வசதி வேண்டும் என்பதால் அந்த எடைக்குறைப்பு ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.
அன்று இரவு உணவுக்கு வரமாட்டோம் என ஓட்டல்காரர்களிடம் சொல்லிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பினோம். சென்ற முறை விட்டுப்போன லே நகர மார்க்கெட்டை முழுக்க பார்ப்பதுதான் திட்டம்.

கடைத் தெருவெங்கும் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது லே நகரம். லேசனா குளிர், அதிகமில்லை, 15 டிகிரி இருக்கும். குறுகிய சந்துகளில் இருபுறமும் கடைகள், காஷ்மீர் சால்வைகள், கார்பெட்டுகள், குங்குமப் பூ, கைவினைப் பொருள்கள், ஆன்ட்டிக் கடைகள் எனப் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கானவையாக அவை இருந்தன. அவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அந்தத் தெருவிலிருந்து சிறிது தள்ளி இன்னொரு கடை வீதி தென்பட்டது. அது லே நகரின் மெயின் மார்க்கெட் பகுதி. அந்த சாலையில் திபெத்தின் ரெபியூஜி மார்க்கெட் இருந்தது. சீனர்கள் திபெத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்துடன் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். 1959 இல் அங்கு ஏற்பட்ட கிளர்ச்சியின்போது அங்கிருந்து வந்த மக்களில் சிலர் லே நகரிலேயே தங்கிவிட்டனர். அவர்கள் தங்களுக்கென்று அமைத்துக்கொண்ட வணிக இடம் அந்த மார்க்கெட் வீதி. நடைபாதையின் இருபுறமும் கடைகள். அங்கு லே, லடாக் சார்ந்து குட்டிக் குட்டி பரிசுப் பொருள்கள், நினைவுச் சின்னங்களை வாங்கலாம். பேரம் பேசினால் சரியான விலைக்குப் பொருள்களைப் பெறும் வாய்ப்புகளும் உண்டு. அந்த ஊரின் பாரம்பரிய அலங்காரப் பொருள்கள், கைவினை ஆபரண வகைகள் என்று எல்லாமே அங்கு இருந்தன.
பிரிதலின் வலி
சஷாங்குக்கும் ப்ரீத்திக்கும் அன்பளிப்பு வாங்க வேண்டும் என்று ஏனோ எனக்குத் தோன்றியது. திபெத்திய மார்க்கெட்டில், புத்த மடாலயங்களில் இருக்கும் பிரார்த்தனை சக்கரங்களின் மாதிரியைச் சிறிய டாலராக வடிவமைத்திருந்தனர். அதைக் கழுத்தில் அணியும் சங்கிலியுடன் ப்ரீத்திக்குத் தருவதற்காக வாங்கிக்கொண்டேன்.
சஷாங்கிற்கு என்ன கொடுக்கலாம் என்று தேடினோம். பத்து இருபது கடைகள் ஏறி இறங்கியும் அவருக்கு என்ன வாங்குவதென்று தெரியவில்லை. ஏதாவது ஆன்ட்டிக் கடையில் திசைகாட்டி, தொலைநோக்கியை வாங்கி கொடுக்கலாம் என நினைத்தோம். எதுவுமே பிடிக்கவில்லை, தவிரவும் அது அவருக்கு எவ்வாறு பயன்படும் என்பதும் சந்தேகம்தான். வெகு நேரம் சுற்றியும் எதுவும் அமையவில்லை. பரிசு வாங்காமல் செல்லவும் மனம் வரவில்லை.
ஸ்ரீநகர் செல்லும் போது ஏதாவது வாங்கி கொடுக்கலாம், இல்லையென்றால் ஊருக்குத் திரும்பியதும் அவரது முகவரிக்கு வாங்கி அனுப்பலாம் என்றெல்லாம்கூட யோசித்துப்பார்த்தோம். ஏனோ அவருக்கு இன்றே ஏதாவது வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.
லே நகர வீதிகளில் எங்கள் அணியினர் சிலரைப் பார்த்தோம். அன்றும் பீர் பாட்டில்களை தேடித்தான் வந்திருந்தனர். சவாலான இடங்களையெல்லாம் கடந்தாகிவிட்டது, இனிமேல் இவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விடுதிக்கு வந்துவிடுங்கள் என அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தோம்.

ஒன்பது மணிக்குள் திரும்பிவிடவேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. போகும் வழியில் காஷ்மீரி சால்வை ஒன்றை வாங்கிக்கொண்டோம். ஓட்டல் வரவேற்பறையில் சென்றமர்ந்தோம். அங்கு ஏற்கனவே அணியினர் சிலர் காத்திருந்தனர். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது கேப்டன் வந்தார். அவருக்காக வாங்கி வைத்திருந்த சால்வையைக் கொடுத்தோம்.
‘நீங்கள் இருவரும் பழகிய சில நாள்களிலேயே எனக்கு நெருக்கமாகிவிட்டீர்கள். இருப்பினும் இதை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று சொன்னார். சால்வையைப் பிரித்துப்பார்த்து விட்டு, ‘மிகவும் அழகாக இருக்கிறது. இதை நான் வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபருக்குக் கொடுக்கப் போகிறேன்’ என்றார். எங்கள் முக பாவனைகளைப் பார்த்துவிட்டு ‘அதிகம் யோசிக்கவேண்டாம். என் தாயை சொன்னேன்’ என்றார்.
அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளியே சென்றிருந்த அணியினர் திரும்பியதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்தோம், அடுத்த நாளை பற்றிப் பேசுவதற்கு. எப்போதும் கேப்டனுடன் பார்த் நின்று பேசுவார். இன்றைக்குப் புதிதாக ஒருவர் அவர்களுடன் நின்றிருந்தார். சராசரிக்கும் சற்று குறைவான உயரம். தோள்கள் வரை நீண்ட தலைமுடி, அதில் முன்பகுதி மட்டும் பின்னப்பட்டு சாயம் பூசிருந்தது. ஓவர் சைஸ்ட் சட்டை, பேண்டை அணிந்திருந்தார். அது ஓவர் சைஸ் என்பதையும் தாண்டி பெரியதாகவே இருந்தது. அவர் யாராக இருக்குமென எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
வழக்கம் போல இன்றைக்கு நாள் எப்படி இருந்ததென்று தொடங்கினார் சஷாங்க். நான் முந்திக்கொண்டு, ‘மூன்று தினங்கள் கழித்து இன்றுதான் ஒழுங்கான தார் சாலைகளைப் பார்க்க முடிந்தது’ என்றேன். அவர் சிரித்துவிட்டு மற்றவர்களிடம் கேட்டார். அனைவரும் அவரவரின் கருத்துகளைச் சொன்னார்கள்.
அதன்பின் பேசிய கேப்டன்.‘இப்போது ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இன்றோடு உங்களுடனான என் பயணம் முடிவுக்கு வருகிறது. இனிமேல் உங்களுக்கு இவர்தான் புதிய கேப்டன்’ என்று அருகில் நின்றிருந்த அந்த நீண்ட முடிக்காரரை அறிமுகம் செய்துவைத்தார்.
எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு என்னிடம் சிரித்துப் பேசிவிட்டு இப்போது வந்து இப்படி சொல்கிறாரே என்று. தொடர்ந்து பேசினார். ‘நான் உங்களுடன் ஸ்ரீநகர் வரை வந்து பயணத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, புதிய குழுவோடு அங்கிருந்து பயணத்தைத் தொடங்குவதுதான் திட்டமாக இருந்தது. இப்போது அதில் சில மாற்றங்கள். அலுவலகக் குழுவினர் யோசனையின் பேரில் இவர்தான் அடுத்த இரண்டு தினங்களுக்கு உங்களை வழிநடத்திச்செல்லப் போகிறார்’ என்றார்.
மேலும் பேசியவர், ‘என்னைப் பொறுத்தவரை இது என் அனுபவத்தில் மறக்கமுடியாத ஓர் அணி. உங்கள் ஒவ்வொருவருடனும் செலவிட்ட நேரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சில காரணங்களுக்காக நம் பயணம் இங்கே முடிகிறது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்து பத்திரமாக வீடு சேர வேண்டும். நான் சில நாள்கள் ஓய்விற்குப் பிறகு இங்கிருந்து கிளம்புவேன். அடுத்த ஆறு மாதங்களுக்கு தவாங் செல்கிறேன். அங்குப் புது மனிதர்கள், புதுக் கதைகள். அப்படியே எனது பயணம் தொடரும்.
நான் என்னுடைய வாழ்வில் எண்ணற்ற இடங்களில் சுற்றித்திரிந்துள்ளேன். பலவிதமான மனிதர்களோடு இருந்திருக்கிறேன். பிடித்த வேலைகளைச் செய்திருக்கிறேன். புகைப்படக்கலைஞனாக இருந்துள்ளேன். ஸ்டார் ஸ்போர்ட்சுக்காக வேலை செய்துள்ளேன். முறையாக மலையேற்றம் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராகச் சில காலம், பைக் ட்ரிப்களை வழிநடத்தும் கேப்டனாக இப்போது.
எதைச் செய்தாலும் அதை முழுமனத்துடன் செய்ய வேண்டும். லடாக் தன்னிடம் வருபவர்களுக்கு நிச்சயம் எதையாவது கொடுத்தனுப்பும். பைக் ட்ரிப் என்பது வெறுமனே ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தனி உறவு. தனி வாழ்க்கை. நீங்கள் கடந்து வந்த ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு தடமும் உங்கள் அனைவரையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதித்திருக்கும். அவை உங்களுக்குச் சொல்ல வரும் பாடத்தை உணர்ந்துகொள்ளுங்கள். தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.
இத்தனை நாள்களும் தினமும் காலையில் நான்தான் உங்களை எல்லாம் எழுப்பினேன், அதேபோல நாளையும் நானே உங்களை வந்து எழுப்புவேன். வழியனுப்புவேன். இப்போது நீங்கள் ஏதாவது சொல்லவிரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால், இந்தச் சந்திப்பு முடிந்ததும், ஓட்டலின் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் இருப்பேன். அங்கு பேசலாம். நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லுங்கள் என்றார்.
நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. முன்னறிவிப்பில்லாமல் இப்படிப் பாதியில் விட்டுவிட்டுப் போகிறார் என்கிற கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் என்னை திகைத்துபோகச் செய்திருந்தன. அனைவரும் பேசிவிட்டு அவரவர் அறைக்குச் சென்றார்கள்.
நானும் நவீனும் அங்கேயே நின்றிருந்தோம். சற்று தொலைவில் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்தவர், எங்களைக் கவனித்ததும் அருகில் வந்தார். இப்போது என்னுடைய கோபம் ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அழுகையாக வெடிக்கக் காத்திருந்தது. அப்படிச் செய்வது அங்கே தர்மசங்கடமான நிலையை உருவாக்கிவிடும். அதை சமாளிப்பதற்காக கோபமாக அவரிடம் பேசினேன்.
‘இதைப் பற்றி ஏன் முன்பே கூறவில்லை. ஸ்ரீ நகர் வரை வருவதுதானே உங்களுடைய கடமை. நாம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இப்படித் திடீரென்று புறப்படுகிறீர்கள்’ என்றேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பதிலளித்தார்.

‘எனக்கு இந்த விஷயம் இன்று மாலையில்தான் தெரியும். நீங்கள் இருவரும் எப்போதும் எனக்குப் பிரியமானவர்கள். நான் விரைவில் உங்களைக் காண உங்கள் தோட்டத்திற்கு வருகிறேன். சந்தோஷமாகப் பயணத்தைத் தொடருங்கள்’ என்றார். ‘நாளை காலை நிச்சயம் உங்களைச் சந்திக்க வருவேன். கவலை வேண்டாம் எப்போது நினைத்தாலும் உடனே தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம்’ என்றார்.
அதற்குமேல் அவருடன் நின்று பேசினால் வருத்தம்தான் அதிகரிக்கும் எனப் புரிந்தது. அவரிடம் விடைபெற்றுக்கொண்டு நானும் நவீனும் எங்கள் அறைக்கு வந்தோம். அரை மணி நேரத்தில் எல்லாமே மாறிப்போயிருந்தது. மாலையில்தான் பார்த்துப் பார்த்து இவருக்கும் அன்பளிப்பு வாங்கிக்கொண்டு வந்தோம், அதற்குள் கிளம்புகிறேன் என்கிறார். ஒருவேளை இதனால்தான் எனக்கு இன்று நிச்சயம் ஏதாவது வாங்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு வந்ததா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
எப்படியும் பத்து நாள் பயணத்திற்குப் பிறகு அனைவரும் அவரவர் இடங்களுக்குச் சென்றுதான் ஆகவேண்டும். இது தெரிந்தும் நான் ஏன் இன்று இப்படிச் செய்தேன் என்பத்தைதான் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தேன். அநேகமாக இந்தப் பயணத்தின் அனுபவப் பாடம் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்றே அந்நிகழ்வைப் புரிந்துகொண்டேன். இத்தனை நாள்கள் சிரித்து ரசித்து சுற்றியாகிவிட்டது. இனிமேல் இந்த இடம், இந்தப் பயணம் எனக்குச் சொல்ல வரும் செய்தியைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது.
மனத்திற்கும் மூளைக்குமான உரையாடலில் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. முதல் மாடியின் பால்கனியில் பேச்சு சத்தமும், பாடல்களும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தன. அது சஷாங்கின் கச்சேரிதான் எனத் தெரிந்தது. நான் அடுத்த நாளுக்கான உடுப்புகளை எடுத்துவைக்கத் தொடங்கினேன்.
(தொடரும்)
– rajshriselvaraj02@gmail.com

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!