• August 21, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்காவுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து திரும்புவதற்கு விமானத்தில் எரிபொருள் நிரப்ப, ரஷ்ய அரசு 2,50,000 அமெரிக்க டாலர்கள் பணமாக செலுத்தவேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

புதின் – ட்ரம்ப்

அசாதாரணமான நிகழ்வுக்கு காரணம் என்ன?

ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவில் இறங்கிய புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதோ, சந்திப்புகளில் கலந்துகொள்ளும்போதோ எரிபொருளுக்கான தொகையை பணமாக செலுத்த வேண்டியிருப்பது அசாதாரணமானது.

இதுகுறித்து விளக்கமளித்த மார்க்கோ ரூபியோ, “ரஷ்யர்கள் அமெரிக்கா வந்தபோது, அவர்கள் விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை ரொக்கமாக கொடுக்க முன்வந்தனர். ஏனென்றால் அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக அவர்களால் நமது வங்கி அமைப்பை பயன்படுத்த முடியாது.” என விளக்கமளித்தார் ரூபியோ.

பொருளாதார தடைகளின் விளைவு?

ரூபியோ

மேலும், “ரஷ்யா மீது போடப்பட்ட ஒவ்வொரு தடையும் அப்படியே இருக்கிறது. ஒவ்வொருநாளும் அவர்கள் பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். ஆனாலும் அது இந்த போரின் திசையை மாற்றவில்லை என்பதுதான் சாராம்சம். இதனால் தடைகள் அர்த்தமற்றது என பொருளில்லை; அதற்கான விளைவை உருவாக்கவில்லை” என்றார்.

மேலும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரித்து போர் நிறுத்தத்துக்கு நிர்பந்திப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “ரஷ்யா ஏற்கெனவே கடுமையான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அது போரில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்னும் தடைகளை விதிப்பது போர் நிறுத்தத்துக்கு நிர்பந்திக்கும் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால் தடைகளை அவர்களைப் பாதிக்க சில வாரங்கள், சில நேரங்களில் மாதங்கள் கூட ஆகலாம்.” என்றார்.

போர் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் சந்திப்பில் எந்தவொரு உடன்படிக்கையும் ஏற்படவில்லை. எனினும் உக்ரைன் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிப்பது குறித்து ஜெலன்ஸ்கி மற்றும் சில ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவாத்தை நடத்தினார் ட்ரம்ப்.

போர் நிறுத்தம் குறித்து புதினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கும் முடிவுகளுக்கு உடன்பட மாட்டோம் எனவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *