
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு முக்கிய காரணமாக மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் தொடர்ந்து கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டு 10 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு உள்ளிட்ட சுமார் 10-க்கு மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பூம்பாறை பகுதிகளில் மட்டும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

கொடைக்கானல் நகர் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை நடத்தி வரும் இன்பதுல்லா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன், எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள், வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.