
பட்டினி பெருமருந்து என்கிறது சித்த மருத்துவம். அப்படி என்னென்ன நன்மைகளை இந்தப் பட்டினி நமக்கு செய்கிறது; இதை யாரெல்லாம் கடைபிடிக்கலாம்; யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்; பட்டினி இருப்பதற்கான முறை; அதை எவ்வாறு முடிக்க வேண்டும் ஆகியவற்றைப் பற்றி சித்த மருத்துவர் செல்வ சண்முகம் இங்கே சொல்கிறார்.
* பட்டினி கிடத்தல் அல்லது உண்ணாவிரதம் என்று அழைக்கப்படும் நிகழ்வை கடைபிடிப்பதினால் நம் உடலில் நோய் வருவதற்கான காரணங்களைக் குறைக்க முடியும்.
உதாரணமாக, இதய செயலிழப்புக்கு காரணமான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற காரணிகளை வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும்.
* ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் முழுமை பெறாத செல்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கும்.
*இரிட்டபிள் பவல் டிஸார்டர், ஆட்டோ இம்யூன் டிஸார்டர் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி பட்டினி இருப்பது உதவியாக இருக்கும்.
* வளர்ச்சி ஹார்மோன் அதிகரிக்கும்; பார்க்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் பட்டினி இருத்தல் உதவி செய்யும்.

பட்டினி இருத்தல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும், அவர்களின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட வேண்டிய அறிவுரையாகும்.
பொதுவாக, வாரம் ஒருநாள் பட்டினி இருத்தல் சிறந்தது. அதுவும், விடுமுறை நாள்களில் பட்டினி இருத்தல் மிகவும் நன்று.
இது முடியவில்லை ஒருவேளை மட்டும் இருக்கலாம். ஆனால், காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். அதற்குமாறாக மதியம் அல்லது இரவு நேரங்களில் பட்டினி இருக்கலாம்.
உடல் பருமனாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று ஐந்து வயதில் இருந்தே வாரம் ஒருநாள் ஒருவேளை மட்டும் பட்டினி இருக்கலாம்.

* பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பட்டினி இருக்கக்கூடாது. குறிப்பாக அதிகளவு ஊட்டச்சத்து தேவைப்படும் இரண்டாவது டிரைமெஸ்டரில் கூடவே கூடாது. ஒரு வேளை மட்டும் உணவைத் தவிர்க்க விரும்பினாலும் கஞ்சி, பழங்கள் என சாப்பிட வேண்டும்.
* பாலூட்டும் தாய்மார்கள் பட்டினிக் கிடப்பதினால் சரியான அளவு ஊட்டச்சத்து குழந்தைக்குச் சென்றடையாது. எனவே இவர்களும் பட்டினி இருத்தல் கூடாது.
* நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், சாப்பிட்டப் பிறகு மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள் பட்டினி கிடத்தல் கூடாது.
* மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி இருக்கும்போது அவர்களின் நோய் தீவிரமடையும். எனவே அவர்கள் நன்கு சாப்பிட வேண்டும். பட்டினி இருத்தல் கூடாது.
*உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவர்களுடைய மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, மருந்துகளை இடைநிறுத்தம் செய்து, அதற்கேற்றார்போல் பட்டினி இருக்கலாம்.

வயதானவர்கள் கஞ்சிபோல ஏதாவது ஒரு லேசான உணவை தயார் செய்துகொண்டு ஒரு வேளை மட்டும் பட்டினி இருக்கலாம். முடியவில்லை என்றால், உடனே சாப்பிட்டுவிடலாம். உண்மையில், பட்டினி இருப்பதினால் அவர்களின் ஆரோக்கியம் கூடும்.
கூடவே கூடாது. காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. மதியம் அல்லது இரவில் பட்டினி இருக்கலாம்.

பட்டினி இருக்கபோகும் நாளைக்கு முன் தினம் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக நன்கு திடமான உணவை உண்ண வேண்டும். பிறகு, மறுநாள் முழுவதும் பட்டினி இருக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு மீண்டும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பட்டினி இருந்தால்தான் புற்றுநோய்கூட வராமல் தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.
பட்டினியை முடிக்கும்போது நீர்த்துவமான கஞ்சி, ரசம், மோர் போன்றவற்றை முதலில் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இவ்வாறு முடிக்கும்போது பானகத்தை எடுத்துக்கொள்வது வெகு சிறப்பு.
இது, நாம் அடுத்தடுத்து உண்ணும் உணவுப்பொருள்களை சிறப்பாக செரிமானம் செய்ய உதவும்.
தவிர, நோன்புக்கஞ்சி, இஞ்சி சீரகம் கலந்த மோர் முதலியவற்றையும் அருந்தி பட்டினியை முடிக்கலாம்.
தற்போதைய அறிவியல் ஆய்வுகள், வாரத்திற்கு ஒரு நாளாவது பட்டினி இருந்து உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அளித்தால் பல்வேறு வாழ்வியல் நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கின்றன. உண்மையில் பட்டினி என்பது பெருமருந்துதான் என்கிறார்” மருத்துவர் செல்வ சண்முகம்.