
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வென்றெடுத்தது. ஆனால், இந்த முறை அப்படி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
கோவைக்கென சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதல்வர், கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியையும் நியமித்தார். வழக்கு காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து விலகினாலும் இன்னமும் அவர் கோவை மாவட்ட பொறுப்பாளராகவே நீடிக்கிறார். கூடுதலாக மண்டல பொறுப்பையும் அவருக்கு வழங்கி இருக்கிறார் ஸ்டாலின்.