
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்-அர்ச்சனா தம்பதி பழைய ரயில் நிலையம் அருகே வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த அர்ச்சனாவின் தந்தை செல்வம், தாய் கவிதா, உறவினர்கள் பழனிசாமி,கருமலையான்,சண்முகம், யுவராஜ் ஆகியோர் அர்ச்சனாவை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விஜய் ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸார் உஷார்படுத்திய நிலையில், அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடியைக் கடந்து, பர்கூர்மலை வழியாக கார் செல்வது தெரியவந்தது.
இந்நிலையில், வாந்தி வருவதாக அர்ச்சனா கூறியதால் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, காரில் இருந்து தப்பித்த அர்ச்சனா அங்கிருந்த கடைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் பர்கூர் போலீஸார் அர்ச்சனாவை மீட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பிடித்து ஈரோடு தெற்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அர்ச்சனாவின் பெற்றோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தங்களின் விருப்பம் இல்லாமல் அர்ச்சனா காதலித்து வேறு சமூகத்தைச் சேர்ந்த விஜயை திருமணம் செய்ததால், அவரை கர்நாடகவுக்கு அழைத்துச்சென்று மாந்திரீகம் மூலம் மனதை மாற்ற கடத்திச்சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அர்ச்சனாவின் தந்தை பழனிசாமி உள்பட ஆறு பேரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். காரில் இருந்த எலுமிச்சை பழங்கள்,முடி உள்ளிட்ட மாந்திரீகம் செய்வதற்கான பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணை கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீகம் செய்ய கடத்திச் சென்ற பெண்ணின் பெற்றோர் கடத்திச் சென்றது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.