• August 20, 2025
  • NewsEditor
  • 0

இத்தாலியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சுற்றுலாத்தளமான பொம்பெயி (pompeii)-ல் கலைப்பொருட்களை முதுகுப்பையில் வைத்து திருடிச் செல்ல முயன்ற 51 வயது ஸ்காட்லாந்து சுற்றுலாப் பயணி பிடிபட்டுள்ளார்.

பண்டைய ரோமானிய நகரமான இங்கிருந்து 5 கற்கள் மற்றும் ஒரு செங்கல் என 6 பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார் அந்த பயணி. அவரது நடவடிக்களைக் கண்டு சந்தேகமடைந்த வழிகாட்டி (guide) காவல்துறையை அழைத்துள்ளார்.

Pompeii, Italy

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான பொம்பெயிலிருந்து கற்கள் திருடியவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதுடன், இத்தாலிய அதிகாரிகள் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவரிடமிருந்து கற்கள் மீட்கப்பட்டு மீண்டும் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியக பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக சுற்றுலாப் பயணிக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

சபிக்கப்பட்ட நகரமா?

பொம்பெயில் திருடுவதனால் சட்டப்பூர்வமாக தண்டனை வழங்கப்படுவது மட்டுமல்லாமல் துரதிர்ஷ்டமும் துரத்தும் என நம்பப்படுகிறது.

வெசுவியஸ் எரிமலை

பழமையான இந்த நகரம் கி.மு 310ல் ரோமானிய கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. கி.பி 79ம் ஆண்டு வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் புதையுண்டிருக்கிறது. ரோமானியர்கள் இயற்கை பேரழிவுகளை கடவுளின் செயலாகத் தொடர்புபடுத்துவதனால், இந்த நகரின் அழிவு குறித்து பல்வேறு கதைகள் மக்களால் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

1748ம் ஆண்டு ஸ்பானிஷ் அகழ்வாராய்சி அறிஞர்கள் இந்த நகரைக் கண்டறிந்துள்ளனர். அப்போது எரிமலை சாம்பலால் மூடப்பட்ட பிணங்கள் உட்பட சிதிலமடைந்த மனித உடல்களை எடுத்தனர். இது உள்ளூர்வாசிகள் மனதில் ஆழமான அச்சத்தை விதைத்தது.

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நபர்

2020ம் ஆண்டு இங்கு வந்த ஒரு பெண்மணி, 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடியதாக சில அரும்பொருட்களைத் திருப்பிக்கொடுத்தார். அந்த கற்களை எடுத்துச் சென்றது முதல் தன்னை துரதிர்ஷ்டம் பீடித்ததாகவும் தனிப்பட்ட, குடும்ப சூழலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த தளத்தை சாபமாகக் கருதுவது வலுவடைந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *