• August 20, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தினால் இந்தியா-சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.

இந்தியா மீது 25% வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதனால் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்தார். இதனால் அதிகபட்ச வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியது இந்தியா.

அதிபர் ட்ரம்ப்

நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்

இந்தச் சூழலில் ட்ரம்பின் வரிவிதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடு செய்ய முன்வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதரக பொறுப்பாளர் ரோமன் பபுஷ்கின் மோடியை ‘நண்பர்’ என அழைக்கும் ட்ரம்ப் 50% வரி விதித்துள்ளதை சுட்டிக்காட்டி, “அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சட்டவிரோத போட்டிக்கான ஒரு கருவியாகும். அவர்கள் எப்போதும் இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின்மை, மிரட்டல் மற்றும் அழுத்தம், அத்துடன் தேசிய நலன்களை அவமதிப்பர். நண்பர்கள் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.” என்றார்.

ரஷ்ய தூதரக பொறுப்பாளர் ரோமன் பபுஷ்கின்
ரஷ்ய தூதரக பொறுப்பாளர் ரோமன் பபுஷ்கின்

மேலும் அவர், “இந்தியாவின் ஏற்றுமதிகள் அமெரிக்காவை சென்றடைய முடியவில்லை என்றால், ரஷ்யாவுக்கு திரும்பலாம்” என்றார்.

இந்தியாவுக்கு அதிக லாபம் உள்ளது

கடந்த காலங்களில் வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா உறவு காலத்தின் சோதனைகளைக் கடந்து உறுதியாக இருந்துள்ளது என்பதை வெளிச்சமிட்டு காட்டினார் பபுஷ்கின்.

“மேற்கு நாடுகள் உங்களை விமர்சிக்கின்றன என்றால்… நீங்கள் அனைத்தையும் சரியாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தடைகளை எதிர்கொண்டு வருகிறோம். ஆனால் எங்கள் வர்த்தகம் வளர்ந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் எங்கள் வர்த்தகம் 7 மடங்கு அதிகரித்துள்ளது.” என்றார்.

முன்னதாக இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் எண்ணெய் வழங்குவதாக அறிவித்தது ரஷ்யா. அதனைக் குறிப்பிடும் வகையில், “ரஷ்ய எண்ணெய்யில் இந்தியாவுக்கு அதிக லாபம் உள்ளது, இறக்குமதியை மாற்றும் எதிர்கால திட்டங்கள் இல்லை” என அறிவித்தார்.

மீண்டும் RIC பேச்சுவார்த்தை?

இதற்கு இடையில் ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடருவது பற்றியும் குறிப்பிட்டார் அவர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருக்கும் RIC பேச்சுவாத்தைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலகில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக்கு எதிரானதாக அது இருக்கும் என்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அதிகரிக்க அவசியாமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *