
மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொத்து வரி விதிப்பு மறு ஆய்வு பணியை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்ளவும், இது தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்யவும் மதுரை ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடுகையில், மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டுகளில் நடந்த சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உதவி ஆணையர் (வருவாய்) மேற்பார்வையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.