• August 20, 2025
  • NewsEditor
  • 0

பாஜக அரசு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது.

இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பிராந்திய கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சசி தரூர் அந்தக் கட்சி பார்வைக்கு மாறாக பேசியிருப்பதாக செய்தி வெளியிட்டது என்.டி.டி.வி செய்தி தளம்.

பிரியங்கா காந்தியுடன் சசி தரூர்

கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்து, சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் சசி தரூர். இதனால் கேரள காங்கிரஸிலும், தேசிய மட்டத்திலும் அவருக்கு எதிரான அலைக் கிளம்பியிருந்தது.

சர்ச்சைக்குரிய மசோதா

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவின்படி, முதலமைச்சர், அமைச்சர்கள் அல்லது பிரதமர் போன்ற அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனைப் பெறக் கூடிய குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தால் (நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமில்லாமல்) 31வது நாள் கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும்.

அமித் ஷா
அமித் ஷா

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

இந்த மசோதாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வதேரா, “நாளைக்கு நீங்கள் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஏதேனும் ஒரு வழக்கை பதிவு செய்வீர்கள், தண்டனை பெறாத அவரை 30 நாட்கள் கைது செய்து வைத்திருப்பீர்கள்… உடனே அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? இது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது” எனப் பேசினார்.

சசி தரூர் என்ன சொல்கிறார்?

ஆனால் நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த திருவனந்தபுரம் எம்.பி காங்கிரஸின் பார்வைக்கு மாறாக, “நீங்கள் 30 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, அமைச்சராகவும் தொடருவீர்களா… இது அடிப்படை அறிவு சார்ந்தது, எனக்கு இந்த மசோதாவில் எதுவும் தவறாகத் தெரியவில்லை” எனக் கூறியதாக செய்தி வெளியானது.

எனினும் என்.டி.டி.வியின் இந்த செய்திக்கு விளக்கமளித்த அவர் தான் பேசியது ஒன்றாகவும், மீடியாவில் தெரிவிக்கப்பட்டது ஒன்றாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

“நான் தனிப்பட்ட முறையில் மசோதாவைப் படிக்கவில்லை. (மசோதா மீது எதிர்க்கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் முன்னர்) மேலோட்டமாகப் பார்த்தால் தவறு செய்பவர்கள் அமைச்சர்களாகத் தொடரக் கூடாது எனக் கூறுவதில் எந்த தவறும் இருப்பதாகக்த் தெரியவில்லை என்றேன். மேலும் மசோதாவைப் படிக்காமல் நான் ஏற்கவோ மறுக்கவோ மாட்டேன் என்றும் கூறினேன். ஆனால் மீடியா அதன் வழக்கமான வேலையைப் பார்த்திருக்கிறது” என சமூக வலைதளங்களில் பேசியுள்ளார்.

சசி தரூர் மற்றும் காங்கிரஸ் இடையிலான உரசல் 2021ம் ஆண்டில் தொடங்கியது. காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து நின்றார் தரூர். சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்து உரையாடினாலும் அவரது போக்கில் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. தற்போது காங்கிராஸுக்கு எதிராக பேசவில்லை என்பதை விளக்கியிருப்பது முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *