
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அந்த வரிசையில், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பினராயி விஜயன், “இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவானது, கூட்டாட்சி மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்.
மேலும், இந்த மசோதாவானது மத்திய ஏஜென்சிகளை ஆயுதமாக்குவதன் மூலமும், எதிர்க்கட்சியினரை பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைப்பதன் மூலமும், அவர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலமும், பாஜக அல்லாத அரசுகளை வலுவிழக்கச் செய்ய முயல்கிறது.
ஜனநாயக சக்திகள் இந்த பாசிச தாக்குதலை எதிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.