
சென்னை: வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379 பேர் மற்றும் கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, தலைமைச்செயலகத்தில் வேளாண் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 169 பேருக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.