மதுரை மீனாட்சி அம்மன் கையிலும், திருச்செந்தூர் முருகன் கையிலும் இருக்கும் கிளி பற்றிய புராணங்களை நாம் அறிந்திருப்போம், அந்த தெய்வங்களின் அலங்காரத்தில் இடம் பெறும் கிளியை, பட்டால் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஹரிஹரன்.
இவர் செய்த பட்டுக்கிளி அமெரிக்காவில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வரை சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பட்டுக்கிளி பற்றியும் மேலும் எந்தெந்த தெய்வங்களுக்கும், வழிபாட்டுக்கும் பயன்படுகிறது என்பது குறித்தும பகிர்ந்து கொள்கிறார் ஹரிஹரன்.
நம்மகிட்ட ஸ்பெசைல் மீனாட்சி அம்மன் பட்டுக்கிளி, வெல்வெட் துணில பளபளப்பா ஒரிஜினல் மாதிரி பண்ணுவோம், சாமி அலங்கார குடைகள் 4 இன்ச்ல இருந்து 19 இன்ச் வரை செய்வோம் அது கோயில் கருவறைக்கு, வெளிய வலம் வரும் தெய்வங்களுக்கு பின்னாடி வச்சுருப்பாங்க, அதுபோக, மீனாட்சி அம்மன் கொண்டை, கருப்பசாமி கொண்டை, எல்லாம் பண்றோம்.
இது எங்க பாரம்பர்ய தொழில் தான், நாங்க ஐந்து தலைமுறையா செய்திட்டு இருக்கோம், எங்க அப்பா பண்ணிட்டு இருந்தாங்க இப்பா நா ஒரு பத்து வருஷமா பண்ணிட்டு இருக்கேன். எங்க பெரியப்பா எல்லாருமே இதே தொழில் தான் பண்ணிட்டு இருக்காங்க.
பட்டுக்கிளி நாங்க பரம்பரையா பண்ற ஒண்ணுதான். இது கஸ்டமர் கேட்பதற்கு ஏற்ற மாதிரி வெல்வெட் (velvet), சாட்டின் (satin) துணிகளுக்கு உள்ள பஞ்சு அடச்சு பண்ணுவோம், கலரும் டார்க் கிரீன் (dark green) லைட் கிரீன் (lite green), மல்டி கலர் (multi colour) என செய்வோம்.
அதற்கு மேல தேவைகக்கு ஏற்ற மாதிரி பொட்டு வேலைபாடுகள் செய்வோம். இதுல இறக்கை விரித்தபடியும், சாதாரணமா மடித்த படியும் செய்வோம்.
நம்ம மதுரையிலிருந்து கொழும்பு, மேற்கு வங்கம், மும்பை, ஹைதராபாத், திருப்பதி, பெங்களூர், கேரளா என எல்லா இடதுக்கும் அனுப்பிருக்கோம்.
தமிழ்நாட்டுல மற்ற ஊர்களில் இருந்தும் வாங்குவாங்க. முக்கியமா நாங்க இங்க தயார் பண்ணி மதுரை புதுமண்டபத்திற்கு அனுப்புவோம், அங்க வியாபாரம் ஆகும்.
புதுமண்டபம் தான் நாங்க ரெகுலரா கொடுக்கிற இடம், அங்கேயிருந்து கோவில்களுக்கு வாங்கிட்டு போவாங்க, அங்க வர ஃபாரீனர்ஸ், மற்றும் சிலர் அலங்கார பொருளாகவும் வாங்கிட்டு போவாங்க.
தேடி வரவங்க, பொதுவா மதுரை புதுமண்டபம் வியாபாரிகள் கூட காண்டாக்ட் மூலமா வருவாங்க, தமிழ்நாட்ட தாண்டி உள்ளவங்க haricraft என்ற நம்ம பேஸ்புக் (facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மூலமா வருவாங்க
திருச்சனூர் பத்மாவதி தாயார் கோவில், ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோவில், தண்டுபடுத்து முத்தாரம்மன் கோவில், போன்ற கோவில்கள் கருவறையில் வைக்க நம்ம கிளி வாங்கிருக்காங்க.
டெக்சாஸ்-ல் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நம்ம கிளி தான் வச்சுருப்பாங்க. மதுரை சுற்றிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் கருவறையில், முளைப்பாரியில், திருவிழா கரகங்களில் நம்ம கிளி வைப்பாங்க.
மதுரை சித்திரை திருவிழாக்களில் மீனாட்சி அம்மன் வேடம் போடும் அனைவரும் நம்மகிட்ட கிளி வாங்குவாங்க. கொழுக்களில், வரலக்ஷ்மி நோன்பு போன்ற நாளில் அம்மனுக்கு வைத்து வழிபடுவாங்க.
சாமி அலங்கார குடைகள் எல்லா கோவில்களிலும் திருவிழாக்களுக்கு கருவறைக்கு சாமி பின்னாடி வைக்க வாங்குவாங்க.
மீனாட்சி அம்மன் கொண்டை, கருப்பசாமி கொண்டை என எல்லாம் சித்திரை திருவிழாவிற்கு வேடம் போடுறவங்க வாங்குவாங்க.
வாகை மாலை பண்ணுவோம் ஒரு அடி முதல் பத்து அடி வரை பஞ்சில் அடைத்து செய்கின்ற மாலை, நகை மாதிரியும் இருக்கும், அம்மனின் இரண்டு பக்கமும் பெருசா மாலை ஆக சாற்றுவாங்க.
முக்கியமா, சித்திரை திருவிழா தான், வேடம் போடுறவங்க நம்மகிட்ட கேட்பாங்க, வரலக்ஷ்மி நோன்பு, கொலு, போன்ற நாட்கள்ல அதிகமா இருக்கும், அதுபோக ஊர் திருவிழாக்கள், வழக்கமான கஸ்டமர் வருவாங்க.
நான் சாடின் (satin) கிளாத்ல செய்ற கிளி ஒரு விலைக்கும் வெல்வெட் (velvet) கிளாத்ல செய்ற கிளி ஒரு விலைக்கும் விற்பனை செய்வேன்.
ஒரு கிளி தனியாக விற்கும் பொழுது 350 ரூபாய்க்கும் மொத்த விலைக்கு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்வேன்.
முதலுக்கான செலவு எல்லாம் போக மாதம் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் என்றார்.