
மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் மட்டம் 4 மீட்டர் உயரத்தில் செல்கிறது.
இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் குடிசைவாசிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். கிராந்தி நகரில் உள்ள அக்குடிசைவாசிகள் குர்லா மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் புசன் தெரிவித்தார்.
கனமழை காரணமாக தாதர் மற்றும் பாந்த்ரா இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் ரயில் மேற்கு ரயில்வேயில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வேயில் குர்லாவில் இருந்து சி.எஸ்.டி.எம். வரை ரயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. ஹார்பர் லைனிலும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று ஒரே நாளில் மும்பையில் 300 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.
அமிதாப்பச்சன் வீட்டிற்குள் மழை வெள்ளம்
மும்பை முழுக்க கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு வாகன போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பையில் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் பிரதீக்ஷா பங்களாவிற்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது பங்களாவிற்குள் முட்டு அளவுக்குத் தண்ணீர் நிரம்பிக் காணப்பட்டது. உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் தண்ணீருக்குள் நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
ஆரம்பக் காலத்தில் அமிதாப்பச்சன் இந்த வீட்டில்தான் வசித்து வந்தார். ஆனால் அந்தப் பங்களாவை தனது மகளுக்கு அமிதாப்பச்சன் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.