
குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.
குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அங்குள்ள சலூன் கடைகளில் பட்டியல் இனத்தவர்கள் முடி வெட்டிக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அக்கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சாதியினர் சலூன் கடை நடத்துபவர்களுக்கு இது தொடர்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இதனால் அக்கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் முடி வெட்டிக்கொள்ள அருகில் உள்ள நகரம் அல்லது கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலையிலிருந்தனர்.
குழந்தைகளாக இருந்தாலும் அவர்களை பெற்றோர் முடி வெட்டப் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. 6,500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பட்டியலின மக்கள் 250 பேர்தான் வசிக்கின்றனர். இத்தடையை நீக்க வேண்டும் எனப் பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கைக்கு உள்ளூர் சமூக ஆர்வலர் சேதன் ஆதரவு கொடுத்தார். இது தொடர்பாக உள்ளூர் மட்டத்தில் ஆதிக்கச் சாதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து இப்பிரச்னை போலீஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
போலீஸார் பேசிப்பார்த்தனர். அவர்களாலும் முடியவில்லை. இதையடுத்து இதனை மாவட்ட நிர்வாகத்திற்குக் கொண்டு சென்றனர். அரசு அதிகாரி ஜனக் மேத்தா இவ்விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை மாதக்கணக்கில் நடந்தது.
இறுதியில் சலூன் கடைகளில் பட்டியலின மக்கள் முடிவெட்டிக்கொள்ள விதிக்கப்பட்டு இருந்த எழுதப்படாத தடையை விலக்கிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் சம்மதம் தெரிவித்தனர். முடிவெட்டிக்கொள்ள மக்கள் 24 ஆண்டுகள் போராடி உரிமையைப் பெற்று இருக்கின்றனர்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ் செளதரி கூறுகையில், ”முடி வெட்டிக்கொள்ள அனுமதி கொடுக்கப்படாமல் இருந்ததை நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன். எனது பதவிக்காலத்தில் இத்தடை முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சோகாஜி செளகான் (58) கூறுகையில், ”நாங்கள் முடிவெட்டிக்கொள்ளப் பல கிலோமீட்டர் நடந்து சென்று கொண்டிருந்தோம். எனது தந்தையும் இந்தக் கொடுமையை அனுபவித்தார். ஆனால் எனது குழந்தைகளுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்து இருக்கிறது. அவர்கள் இனி எங்களது கிராமத்திலேயே முடிவெட்டிக்கொள்ள முடியும்” என்றார்.
இது குறித்து அக்கிராமத்தில் சலூன் கடை நடத்தி வரும் பிந்தோ கூறுகையில், ”நாங்கள் கிராமத்தின் உத்தரவைப் பின்பற்றுகிறோம். ஊர் பெரியவர்கள் இதனைத் திருத்திக்கொள்ள முடிவு செய்தால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு வியாபாரம் நடக்கும்” என்றார்.
தடை விலக்கிக்கொண்ட பிறகு பட்டியலினத்தைச் சேர்ந்த கீர்த்தி செளகான் என்பவருக்கு சலூன் கடை நடத்தும் பிந்தோ என்பவர்தான் முடி வெட்டினார். முதல் முறையாக சொந்த கிராமத்தில் முடி வெட்டிக்கொள்வது குறித்து கீர்த்தி செளகான் கூறுகையில், ”நான் கடந்த 24 ஆண்டுகளாக வெளியூரில் சென்றுதான் முடி வெட்டிக்கொள்கிறேன். இப்போதுதான் சொந்த ஊரில் முடி வெட்டி இருக்கிறேன். இது எங்களது சமுதாய மக்களுக்குக் கிடைத்த சுதந்திரமாகவே கருதுகிறேன். இப்போதுதான் சுதந்திரமாக உணர்கிறேன். எங்களை எங்களது கிராமம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இக்கிராமத்தில் வசிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பிரகாஷ் பட்டேல் இது குறித்துக் கூறுகையில், ”பட்டியலின மக்களை ஆதிக்கச் சாதியினர் நடத்தும் மளிகைக் கடைகளில் அனுமதிக்கும்போது சலூன் கடைகளில் ஏன் அனுமதிக்கக்கூடாது? இத்தடை நீக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
இக்கிராமத்தில் அன்னதானம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் பட்டியலின மக்கள் இப்போதும் தனி வரிசையில் அமர்ந்து சாப்பிட வேண்டிய அவலநிலை இருக்கிறது. அதையும் நீக்கவேண்டும் என்று அங்குள்ள பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திரம் அடைந்து இத்தனையாண்டுகள் ஆகியும், சாதிய ரீதியாக மக்கள் ஒடுக்கப்படும் நிலை முற்றிலுமாக அகற்றப்படவேண்டும் என்பதே அம்மக்களின் குரலாக இருக்கிறது.