
இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பலர் முழுநேர தொழிலாக அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலரும் தங்களின் அன்றாட வேலைகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதன் மூலம் சம்பாதித்தும் பிரபலமாகியும் வருகின்றனர்.
அந்த வகையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த ராஜேஷ், ‘R Rajesh Vlogs’ என்ற யூடியூப் சேனல் மூலம் டிரக் ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து பிரபலமானவர்.
இவர் தற்போது லம்போர்கினி ஹுராகான் ஆடம்பர காரை ஓட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ராஜேஷ் தனது மகனுடன் அசாமிற்கு சென்றிருந்தார். அங்கு, அவர்களது டிரக்கில் உள்ள பொருள்களை இறக்குவதற்கு சில நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இது டிரக் ஓட்டுநர்களுக்கு நடக்கும் வழக்கமான ஒரு சூழ்நிலை தான். இந்தப் பயணத்தின் போது, அவரது நண்பர் ஒருவர் லம்போர்கினி ஹுராகான் காருடன் வந்திருக்கிறார்.
“முதல் முறையாக இப்படியொரு சூப்பர் காரைப் பார்க்கிறேன்,” என்று உற்சாகமாகக் கூறிய ராஜேஷ், முதலில் தயங்கினாலும், நண்பரின் வற்புறுத்தலால் காரை ஓட்டினார். ராஜேஷ் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.
உரிமையாளர், காரை எப்படி இயக்குவது, பின்னோக்கி செல்வது, பேடில் ஷிஃப்டர்களைப் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார்.
காரை ஸ்டார்ட் செய்த ராஜேஷ், ஹோட்டலின் முன்பக்க பகுதியில் இயக்கினார். அந்த சத்தம் அவருக்கு புதிய அனுபவமாக இருந்தது, அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ராஜேஷ், காரை சிறிது தூரம் ஓட்டிய பிறகு, உடனடியாக திரும்பி வந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த ராஜேஷ் ரவானி?
ஜார்க்கண்டைச் சேர்ந்த ராஜேஷ் ரவானி, ‘R Rajesh Vlogs’ என்ற யூடியூப் சேனல் மூலம் இந்தியாவின் மிகவும் பிரபலமான டிரக் ஓட்டுநர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இந்திய டிரக் ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இவரது வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ராஜேஷின் பயணம்
ராஜேஷ் ஒரு எளிய டிரக் ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு டிரக் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் இவர், தனது பயண அனுபவங்களை ‘R Rajesh Vlogs’ மூலம் பகிர்கிறார். இவரது வீடியோக்கள், டிரக் ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கை, சவால்கள் மற்றும் உள்ளூர் கலாசாரங்களை எடுத்துரைக்கின்றன.
இதனால், இவர் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட மக்களிடையே பிரபலமானார். ராஜேஷின் வீடியோக்கள், டிரக் ஓட்டுநர்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
உள்ளூர் சந்தைகள், மக்களின் விருந்தோம்பல், பயண அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து, இவர் பலரது மனங்களை வென்றுள்ளார். இவர் தனது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N SUV-ஐப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டதும் வரவேற்பை பெற்றுள்ளது.