• August 19, 2025
  • NewsEditor
  • 0

தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இதன் வாயிலாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கின்றது.

திமுக ஆதரவு வழங்கினால், அது இந்தியா கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும். ஆதரவு வழங்கவில்லை என்றால் தமிழர் ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆதரவளிக்க திமுக மறுத்துவிட்டது என தேர்தல் களங்களில் பிரசாரம் மேற்கொள்ள முடியும். எனவே இதை மையமாக வைத்து பாஜக தற்போது தீவிர வேலைகளில் இறங்கி இருக்கின்றது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

டெல்லியில் முகாம்

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட பாஜக-வின் மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

நேற்று இரவு குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர்கள், பாஜகவில் தேசியத் தலைவர்கள் பலரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

வேற்றுமைகளையும் மறந்து..!

டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், `தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பெருமை தேடி தருவதாகவும், ஐநா சபை சென்றாலும் கூட தமிழர்களின் பெருமையை அவர் பேசி வருவதாகவும் கூறினார்.

அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பொன்னான வாய்ப்பை பிரதமர் வழங்கி இருப்பதாகவும், இந்த வாய்ப்பை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இருக்கக்கூடிய அத்தனை வேற்றுமைகளையும் மறந்து ஒட்டுமொத்தமாக சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

டெல்லி ப்ளான்!

குறிப்பாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மனது வைத்தால் போட்டியின்றி சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். எனவே இந்தியா கூட்டணி கட்சிகளிடம் திமுக இதை வலியுறுத்த வேண்டும் என கூறியவர் இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும் தயாராக இருப்பதாக கூறினார் நயினார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக தரப்பினரிடம் தொடர்ந்து பேச வேண்டும் என டெல்லி பாஜக தலைமை தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நைனார் நாகேந்திரன் பேட்டி அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

முதலில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது ஒருங்கிணைந்த ஆந்திராவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் பாஜக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உறுப்பினர்களிடம், தமிழருக்கு ஆதரவு தாருங்கள் எனும் முழக்கத்தை முன்னெடுத்து அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *