
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்ற பாறைக்குழிகளை தேர்வு செய்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகரை ஒட்டிய காளம் பாளையம், பொங்குபாளையம் என பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகர் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குப்பை எடுக்காமல் அனைத்து பகுதிகளுமே குப்பை மலை போல தேங்கி இருக்கிறது‌.