
இந்தியாவில் பிரபலமாக இருந்த ஹைக் (Hike) செயலி ஏன் மூடப்பட்டது என்பது குறித்து அதன் நிறுவனர் கவல் கூக் மனம் திறந்து பேசியிருக்கிறார். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்திய இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந்த இந்த செயலி, பல்வேறு சவால்களால் 2021-இல் மூடப்பட்டது.
ஹைக் செயலியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹைக் செயலி, இந்திய பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் உரையாடல், ஸ்டிக்கர்கள் என பல அம்சங்களுடன் அறிமுகமாகியது.
2016-ஆம் ஆண்டு இந்த செயலி 10 கோடி பயனர்களை எட்டியது. ஆனால், அதன் பிறகு இந்த செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் குறையத் தொடங்கியுள்ளனர்.
ஹைக் (Hike) செயலி ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான சில காரணங்களை அதன் நிறுவனர் கவல் கூக் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து கூக் கூறுகையில் ”வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற உலகளாவிய செயலிகளின் ஆதிக்கம், ஹைக் செயலியை பின்னுக்குத் தள்ளியது.
செயலியில் கேமிங், நியூஸ் ஃபீடு போன்ற கூடுதல் அம்சங்களைச் சேர்த்தது பயனர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் செய்தி பரிமாற்றத்தில் கவனம் செலுத்தாமல், பல்வேறு திசைகளில் பயணித்தோம்.
மேலும் செயலியை இயக்குவதற்கு தேவையான நிதியைத் திரட்டுவதில் சிக்கல்கள் எழுந்தன. முதலீட்டாளர்களின் ஆதரவு குறைந்ததால், ஹைக் தனது செயல்பாடுகளைத் தொடர முடியவில்லை.
இந்திய பயனர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் வேகமாக மாறியதால், ஹைக் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள முடியாமல், இந்திய சந்தையில் உள்ளூர் செயலியாக நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால், இந்த அனுபவம் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.