
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. கூடலூரில் 140 மி.மீட்டர் மழை பதிவானது. ஊட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கோயில் சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக ஊட்டி நகரில் உள்ள வண்டி சோலை பகுதியில் இருந்த நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்த சங்கிலி முனீஸ்வரர் கோயில் இடிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராட்சத மரத்தை 2 மணி நேரத்திற்கு மேலாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.