
கயா: இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீதும் 'வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி 16 நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று கயாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் ‘வாக்கு திருட்டு’ பிடிபட்ட பிறகும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு என்னிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ‘வாக்கு திருட்டு’ என்பது பாரத மாதாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல்.