
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் திரையரங்குகளில் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாஜிக் ஓட்டைகள், விடையில்லா கேள்விகள் என இணையத்தில் வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூலில் கவனிக்கத்தக்க முன்னேற்றம் கண்டது. ‘கூலி’ வெளியான நாளிலிருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர், படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சவுபின் ஷாஹிர். மற்றொருவர் கன்னட நடிகை ரச்சிதா ராம்.
வழக்கமாக லோகேஷ் படங்களில், தொடக்கத்தில் முக்கியத்துவம் இல்லாததாக காட்டப்படும் ஒரு கேரக்டர் ஒரு கட்டத்தில் திடீரென வீறுகொண்டு எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிடும். ‘கைதி’ படத்தில் ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா போன்றவை உதாரணம். அப்படியான ஒரு கதாபாத்திரம்தான் ‘கூலி’ படத்தில் ரச்சிதாவுக்கு வழங்கப்பட்டது. முந்தைய இரண்டு கதாபாத்திரங்கள் பாசிட்டிவ் ஆனவை என்றால், இந்தப் படத்தில் ரச்சிதாவுக்கு முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருந்தார் ரச்சிதா.